இலங்கை: முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது பற்றி நாடாளுமன்ற விவாதம்

இலங்கையில் கண்டியிலும் அம்பாறையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்செயல்கள் நடந்துள்ள சூழ்நிலையில், முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையில் ஆடையணிவது குறித்து நாடாளுமன்றத்தில் வாதப் பிரதிவாதம் ஒன்று நடந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

கண்டி வன்செயல்கள் குறித்த விவாதத்தில் பேசிய ஜேவிபி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்னாயக்கா என்பவர், இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் அதிகரித்து விட்டதாகவும், தமிழர் அடிப்படைவாதம் ஏற்கனவே அடிபட்டுவிட்டதாகவும் பேசியுள்ளார்.

இந்த நிலையில் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு எதிராக முஸ்லிம் அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, பள்ளிக்கூட மாணவிகள் கூட முகத்தை மறைத்துக்கொண்டு வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு குறுக்கிட்டு பேசிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் என்பவரோ, ரத்னாயக்காவின் கருத்தை நிராகரித்துள்ளார்.

அதாவது இந்த நாட்டில் மார்புக்கச்சை தெரியும்படி ஒரு பெண்ணால் ஆடை அணிய முடியும் என்றால், தனது முகத்தை மூடும் வகையில் ஆடையணியவும் பெண்களுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

தனது மனைவி அப்படியாக முகத்தை மறைத்து உடையணியாத போதிலும் எவரும் முகத்தை மறைத்து உடையணிவது அவரவர் தனிப்பட்ட உரிமை குறித்தது என்றும், அதில் எவரும் தலையிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

டெங்கு நோயின் பரவலால் பாதிக்கப்பட்ட ஊவா மாகாணத்தில் மாணவிகளுக்கு, அதிலிருந்து தப்பிக்க பஞ்சாபி உடை அணியுமாறு வலியுறுத்தப்பட்டதாக கூறிய ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினர், அப்படி உடலை மறைத்து உடையணியும் போது கொசு (நுளம்பு) தாக்காது என்றும், திறந்த ஆடைகளை அணியும் போது பல துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

பிபிசியிடம் பேசிய அவர், முஸ்லிம் அடிப்படைவாதத்தால் வன்செயல்கள் வரவில்லை என்றும் ஏனையோரின் அப்படியான கருத்துக்களாலேயே வன்செயல்கள் வெடித்தன என்றும் அதிருப்தி வெளியிட்டார்.

இது குறித்து பெண்ணிய செயற்பாட்டாளரான சேதீஸ்வரி யோகதாஸ் கூறுகையில், பெண்களின் உடை என்பது அவரவரது தனிப்பட்ட சுதந்திரம் என்றும் அதனை அடிப்படைவாதத்தோடோ, நன்னடத்தை வாதத்தோடோ சம்பந்தப்படுத்துவது பொருத்தமற்றது என்றும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :