#கள தகவல்: கண்டி வன்முறை: மோதலும் இணக்கமும்

கண்டியில் சமீபத்தில் நடந்த இன ரீதியான தாக்குதல்களில் இஸ்லாமியர்களின் வீடுகளும் சொத்துக்களும் குறிவைத்துத் தாக்கப்பட்ட சம்பவத்தின்போது, பல சிங்களர்கள் தங்கள் அண்டைவீட்டு இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார்கள்.

Image caption இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகளாகப் பார்த்துப் பார்த்து தாக்க ஆரம்பித்தனர் என்கிறார் தையூப்

அன்றைய தினத்தை மிகத் தெளிவாக நினைவு கூர்கிறார் முகமது தையூப். "மதியம் இரண்டரை மணியிலிருந்து இரண்டே முக்கால் மணிக்குள் அந்தத் தாக்குதல் துவங்கியது. இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகளாகப் பார்த்துப் பார்த்து தாக்க ஆரம்பித்தார். அதில் என்னுடைய கடையும் ஒன்று." என்கிறார் 76 வயதாகும் தையூப்.

இலங்கையின் கண்டியின் திகண பகுதியில் உள்ள பல்லேகல்ல பகுதியில் ஒரு சிறிய கடை வைத்திருக்கிறார் தையூப். மார்ச் ஐந்தாம் தேதி பிற்பகலில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் இவரது கடை முற்றிலுமாக எரிக்கப்பட்டது.

Image caption வன்முறையால் சேதமடைந்த கடை
Image caption எரிக்கப்பட்ட தையூபின் கடை

தையூபின் குடும்பத்தில் உள்ள 11 பேருக்கும் இந்தக் கடையிலிருந்து கிடைக்கும் வருவாயும் ஓட்டுனராக உள்ள மகன் சம்பாதித்துவரும் பணமும்தான் ஆதாரமாக இருந்தது. "36 வருடங்களாக நான் இங்கே வசிக்கிறேன். இப்படி ஒரு சம்பவத்தைக் கண்டதில்லை. உள்ளூர் சிங்கள மக்களின் உதவி இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது. காரணம், என் கடைக்குப் பக்கத்தில் உள்ள சிங்களவரின் கடைக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதற்கு அடுத்து உள்ள இஸ்லாமியரின் வீடு தாக்கப்பட்டது" என்கிறார் தையூப்.

இந்தத் தாக்குதல்கள் மாலை நான்கரை மணியளவில் முடிந்துவிட்டாலும் மீண்டும் தாக்குதல்கள் நடக்கக்கூடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டேயிருந்தது. "முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் இலக்குவைத்துத் தாக்கப்பட்டதால், வீட்டுக்குள் இருக்கவும் பயமாக இருந்தது. வீட்டைவிட்டு வெளியில் வரவும் பயமாக இருந்தது. அப்போதுதான் என் வீட்டிற்குப் பின்னால் உள்ள நிமல் சமரசிங்க என்னை தன் வீட்டில் தங்கிக்கொள்ளும்படி அழைத்தார். ஆனால், என் வீட்டில் 11 பேர் என்பதால் இன்னொருவர் வீட்டிற்குச் செல்ல தயக்கமாக இருந்தது. அவர் விடவில்லை" என்கிறார் தையூப்.

Image caption வன்முறையால் அச்சத்தில் உறைந்திருந்த தங்களுக்கு ஆதரவு வழங்கியது நிமல் சமரசிங்க என உணர்ச்சிகரமாக கூறுகிறார் தையூப்

இரவு ஏழு மணிக்கு மேல் தையூபின் வீட்டின் மீது கற்கள் விழத் துவங்கின. கதவுகளிலும் கற்கள் விழுந்தன. போய்ப் பார்க்க நினைத்த தையூபை நிமல் சமரசிங்க விடவில்லை. அன்று இரவு முழுவதும் அவரது வீட்டிலேயே தங்கியிருந்தது தையூபின் குடும்பம்.

"அன்று தாக்குதல் நடத்தி எங்களைக் கொன்றிருப்பார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், அச்சத்தில் உறைந்திருந்த எங்களை அவர் ஆதரித்துக் காப்பாற்றினார். அது முக்கியமானது" என்கிறார் தையூப்.

"ஒரு பெரிய விஷயமாகப் பேசுவதே பிடிக்கவில்லை"

தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றை பழுதுபார்க்கும் வேலைசெய்துவரும் நிமல், "சாதாரண சிங்களர்களுக்கு யாரோடும் பகையில்லை. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் உள்ளூர்காரர்களில்லை என்று நினைக்கிறேன்" என்கிறார்.

நிமலுக்கும் அவரது மனைவி ப்ரிஜெட் சில்வியாவுக்கும் மூன்று குழந்தைகள். "இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாகப் பேசுவதே பிடிக்கவில்லை. ஆபத்தான நேரத்தில் காப்பாற்றாமல் அக்கம் பக்கத்தினர் எதற்கு?" என்கிறார் நிமல்.

எரிந்துபோன முகமது தையூபின் கடை இன்னமும் சுத்தம்கூட செய்யப்படாமல், எரிந்தது எரிந்தபடியே கிடக்கிறது. "சுத்தம் செய்ய ஆட்களை வேலைக்கு வைத்தால் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் தர வேண்டியிருக்கும். கையில் சுத்தமாக காசில்லை. என்ன செய்வது, எப்படி மீண்டும் வாழ்க்கையைத் தொடங்குவது என்று தெரியவில்லை" என்கிறார் தையூப்.

சிங்களர்களால் நடத்தப்பட இந்தத் தாக்குதல், சிங்களர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான முரணை அதிகரித்திருக்கிறது. "இது நல்லதல்ல. பௌத்தம் அமைதியைத்தான் போதிக்கிறது" என்கிறார் திகணையிலுள்ள ஹிஜிரா நகரில் இருக்கும் ஸ்ரீ இந்தசார விஹாரையின் தலைமைத் தேரரான கரடிகல சந்தவிமல தேரர்.

Image caption சந்தவிமல தேரர்

திகண பகுதியில் தாக்குதலுக்கான ஆட்கள் குவிய ஆரம்பித்ததுமே, உடனடியாக செயல்பட்டு தன்னுடைய விகாரைக்கு அருகில் உள்ள இஸ்லாமியர்கள் தாக்கப்படாமல் பார்த்துக்கொண்டார் சந்தவிமலர்.

தொடர்புடைய செய்திகள்:

"ஹிஜிரா நகர், அம்பஹலந்த, குமுக்கந்துரை பகுதிகளில் மொத்தமாக ஐயாயிரம் இஸ்லாமியக் குடும்பங்கள் இருக்கின்றன. மார்ச் ஐந்தாம் தேதியன்று பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது, திகணையில் சிங்களர்கள் குவிவதைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனடியாக பள்ளியில் இருந்து புறப்பட்டு இங்கு வந்து சிங்களர்களைத் திரட்டினேன்." என்கிறார் தேரர்.

தன்னுடைய சுற்றுவட்டாரத்தில் உள்ள சிங்கள மக்களைத் திரட்டியவர், அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று கூறினார். மேலும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி சொன்னதாகவும் தெரிவிக்கிறார்.

இதுபோல நான்கு நாட்களுக்கு பாதுகாப்பு அளித்ததாகவும் பிபிசியிடம் கூறினார் சந்தவிமலர். ஆனால், தாக்குதல் நடந்த வந்தவர்கள் யார் என்பது தனக்குத் தெரியவில்லை என்கிறார் அவர்.

இவரைப் போலவே, வேறு சில பௌத்த பிக்குகளும் தங்கள் பகுதியில் இஸ்லாமியர்கள் தாக்குதல்களில் இறங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமியர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிளவு மிகப் பெரியதாக இருப்பது வெளிப்படையாகவே உணரக்கூடியதாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்:

கண்டியில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 150க்கும் மேற்பட்ட கடைகள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் தீவைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் யார் என்ற விவரம் வெளியடப்படவில்லை.

படத்தின் காப்புரிமை STR/AFP/GETTY IMAGES
Image caption இலங்கை வன்முறையில் சேதமான வாகனம் (கோப்புப் படம்)

கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி தெலெதெனிய பகுதியில் ஒரு வாகன மோதல் தொடர்பாக லாரி டிரைவர் ஒருவர், இஸ்லாமிய இளைஞர்கள் நான்கு பேரால் தாக்கப்பட்டார். சிங்களரான அந்த லாரி டிரைவர் சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து இந்த வன்முறை சம்பவங்கள் சிங்களரைத் தாக்கிய இஸ்லாமியர்களில் இருவர் திகண பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தப் பகுதி குறிவைத்துத் தாக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்