கண்டி கலவரங்கள்: சுற்றுலாத் துறைக்கு பாதிப்பா?#Groundreport

இலங்கையின் சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடத்தில் உள்ள கண்டி, சமீபத்திய கலவரங்களால் திகைத்துப்போயிருக்கிறது. வன்முறை சம்பவங்கள் நடந்த அடுத்த சில தினங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது என்கிறார்கள் அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்.

கண்டியில் உள்ள சுற்றுலா தகவல் மையத்தை அணுகி, சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்துக் கேட்டால் சற்று சங்கடமான புன்னகையுடனேயே பேச ஆரம்பிக்கிறார்கள். "பொதுவாக பெரிய அளவில் பாதிப்பு என்று சொல்ல முடியாது. ஆனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருக்கிறது" என்கிறார் அந்த மையத்தின் தகவல் அதிகாரியான ரோட்னி.

இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும் தவறவிடாத ஒரு நகரம் கண்டி. மத்திய மாகாணத்தின் தலைநகரான கண்டி, நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்று. தம்புல்ல, நுவரேலியா, பொலனறுவ என சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில் அமைந்திருப்பதாலும் புகழ்பெற்ற தலதா மாளிகை எனப்படும் புத்தரின் புனிதப் பல் வைக்கப்பட்டுள்ள கோவில் இருப்பதாலும் ஆண்டு முழுவதுமே சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் நகரம் இது.

ஆனால், இந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதி மதியத்திற்கு மேல், திகணவில் ஏற்பட்ட கலவரத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் சற்று திகைத்துத்தான் போனார்கள். "ஆனால், இது வெகு சில மணி நேரங்களுக்கே நீடித்தது. அதிலும் வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்களைக் காண்பித்தால் அவர்கள் தெருக்களில் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்" என்கிறார் ரோட்னி.

தொடர்புடைய செய்திகள்:

சுற்றுலாத் துறை அதிகாரிகள் இப்படிச் சொன்னாலும், திகண, அக்குறன ஆகிய இடங்களில் நடந்த வன்முறையும் அதைத் தொடர்ந்த ஊரடங்கு உத்தரவு, நெருக்கடி நிலை ஆகியவையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்ச் ஆறாம் தேதிக்கு மேலும் கலவரங்கள் தொடர்ந்த நிலையில், "கண்டியில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கண்டி செல்வதைத் தவிர்க்க வேண்டும்" என்ற அறிக்கை ஒன்றை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை மார்ச் ஏழாம் தேதியன்று வெளியிட்டது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது. கலவரங்கள், நெருக்கடி நிலை ஆகியவற்றைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல்களையும் வெளியிட்டன.

கடந்த மார்ச் 11ஆம் தேதியன்று விழா ஒன்றில் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இது தொடர்பான கவலையை வெளியிட்டார். "கொழும்பு நகருக்கு அடுத்தபடியாக அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் நகரம் கண்டி. அங்கு சுற்றுலாவை நம்பியிருப்பவர்கள், உடனடியாக நிலைமையை சீரமைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார். வன்முறை சம்பவங்கள் முடிந்து சில நாட்களுக்குப் பிறகும் பிரதமர் இவ்வாறு கூறியது, இந்த நிகழ்வுகள் கண்டியின் சுற்றுலாத் துறையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை சுட்டிக்காட்டியது.

தாங்களாகவே திட்டமிட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிக்கு தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும், சுற்றுலா நிறுவனங்களின் மூலம் ஏற்பாடு செய்தவர்கள் தங்கள் பயணங்களை மாற்றிக்கொண்டார்கள். கண்டிக்கு வராமலேயே, தம்புல்ல, பொலநறுவ ஆகிய நகரங்களுக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.

இப்படி சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது, கண்டியின் சுற்றுலா தகவல் மையப் பதிவேட்டைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிகிறது. மார்ச் 4ஆம் தேதியன்று இந்த மையத்திற்கு 47 வெளிநாட்டுப் பயணிகள் வருகைதந்த நிலையில், ஐந்தாம் தேதியன்று இந்த எண்ணிக்கை 38ஆகவும் ஆறாம் தேதி 30ஆகவும் குறைந்தது. ஏழாம் தேதி 25 பேரும் பத்தாம் தேதி 5 பேருமே இங்கு வந்தனர்.

"ஆனால், இப்போது நிலைமை மேம்பட்டிருக்கிறது. 40க்கும் மேற்பட்டவர்கள் இப்போது மீண்டும் வர ஆரம்பித்திருக்கிறார்கள்" என்று பெருமூச்சுவிடுகிறார் ரோட்னி.

தற்போது இங்கு வரும் ஐரோப்பியர்களிடம், கண்டி வன்முறை குறித்த எந்த கவனமும் இல்லை என்றே சொல்லலாம். பேராதனையில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஜெர்மனியிலிருந்து வந்திருந்த மார்க்வெஸ், "அந்த வன்முறைகளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ஆனால், பெரிதாக ஏதும் இருக்குமென்று தோன்றவில்லை. அதனால் வந்தோம்" என்று பிபிசியிடம் கூறினார்.

அங்கு சந்தித்த சில சுற்றுலா வழிகாட்டிகள், மார்ச் ஏழு, எட்டு ஆகிய தினங்களில் வருகை குறைந்ததை ஒப்புக்கொண்டாலும், இப்போது சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். "ஒரு பயமும் இல்லை. எதற்குப் பழைய கதையையே பேசுகிறீர்கள். நீங்கள்தான் பார்க்கிறீர்களே, எவ்வளவு வெளிநாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்பதை?" என்கிறார் வழிகாட்டியான மெர்வின்.

கண்டியின் பிரதான சுற்றுலாத் தலமான தலதா மாளிகையின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர், சுற்றுலாப் பயணிகளின் வருகை 20 சதவீதம் அளவுக்குக் குறைந்தது என்கிறார். "ஆனால், கோவிலில் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன. வெளிநாட்டுப் பயணிகளும் வந்தார்கள். ஊரடங்கு உத்தரவு இருந்தாலும் யாரும் அவர்களை ஏதும் சொல்லவில்லை" என்கிறார் அவர்.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பயணங்களை ரத்துசெய்யவில்லை. சீனாவிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையே வெகுவாகக் குறைந்தது என்கிறார் அவர். "தினமும் 15,000 பேர் இந்தக் கோவிலுக்கு வருவார்கள். மார்ச் 6 முதல் 9ஆம் தேதி வரையிலான நாட்களில் இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது என்றாலும் இப்போது நிலைமை சரியாகிவிட்டது" என்கிறார் அவர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவின் காரணமாக, இங்குள்ள ஹோட்டல்களும் பாதிக்கப்பட்டன. "இங்கே 100 அறைகள் இருக்கின்றன. பொதுவாக வருடம் முழுவதும் 80 சதவீத அறைகள் நிறைந்திருக்கும். மார்ச் வன்முறையைத் தொடர்ந்த நாட்களில் 20 சதவீதம் அளவுக்கு ஆட்கள் வருவது குறைந்தது" என்கிறார் கண்டியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான தி ராயல் கண்டியனின் மேலாளரான சமரவீர.

கண்டி தொடர்பான செய்திகளின் காரணமாக, அதற்கு அருகில் உள்ள நுவரேலியா, ஹட்டன், எல்ல ஆகிய பிரதேசங்களை நோக்கி சுற்றுலாப் பயணிகளின் கவனம் திரும்பியிருப்பதாக உள்ளூர் ஊடங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்: