இலங்கை உள்ளூராட்சி சபைகள்: கட்சிகள் ஆட்சி அமைப்பதில் சிக்கல்

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்து, ஆங்காங்கு சபைகளுக்கு ஆட்சி அமைக்கும் பணிகள், தலைவர், மேயர் ஆகியோரை தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பித்துவிட்டன.

புதிய நேரடி மற்றும் விகிதாசார கலப்பு முறை தேர்தலால் ஏற்பட்டுள்ள தொங்கு அவை நிலைமை, உள்ளூராட்சி சபைகளில் கட்சிகள் ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பெரும் விரோதிகளாக, எதிரெதிர் கொள்கைகளை கொண்டவர்களாக பார்க்கப்பட்ட கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைக்கும் நிலைமை, அல்லது ஒருவருக்கு ஒருவர் ஆதரவு வழங்கி ஆட்சியமைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர் பகுதிகளில் இந்த நிலைமை அதிகம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை யாழ் மாநகர சபையில் நேரடியாக இல்லாவிட்டாலும் கூட மறைமுகமாக தமது விரோதிகளாக பார்த்த டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்(ஈபிடிபி) உதவியுடந்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க நேர்ந்துள்ளது.

அதேவேளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய நகரசபைகளில் நேரடியாகவே ஈபிடிபி உறுப்பினர்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்கும் நிலை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPDPNEWS

இந்த இரு கட்சிகளும் இதுவரை எந்தத் தருணத்திலும் ஒருவரோடு ஒருவர் இணைந்து செயற்பட்டது கிடையாது. ஒருவரை ஒருவர் எதிரிகளாகவே பார்த்து செயற்பட்டு வந்தனர்.

இது குறித்து கருத்து கூறிய வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன், சுயநலத்துக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது என்று விமர்சித்துள்ளார்.

ஆனால், தாம் ஈபிடிபியிடன் பேரம் பேசவில்லை என்றும், ஈபிடிபி தமக்கு நேரடியாக ஆதரவு தரவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

இந்த நடவடிக்கைகள் இலங்கை தமிழ் அரசியல் வட்டாரங்களில்  பெரும் ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றது.

திருவுளச்சீட்டு

இந்தத் தலைவர் மற்றும் மேயர் தேர்வுகளின் போது இன்னுமொரு முறையும் இங்கு பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இருதரப்புக்கும் சமமான பலம் அவைகளில் இருக்கும் பட்சத்தில் திருவுளச்சீட்டு போட்டு( பூவா தலையா?) தலைவரை தேர்வு செய்யும் முறை அமலாகிறது.

யாழ் மாநகர சபை மேயர் தேர்வின் முதல் கட்ட வாக்கெடுப்பில் தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈபிடிபிக்கு இடையிலான போட்டிக்கு திருவுளச்சீட்டு குலுக்கியே ஒருதரப்பு நிராகரிக்கப்பட்டது.

ஹட்டன் நகர சபை

தமிழ் மலையக தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி மத்திய மகாணத்தின் ஹட்டன். அங்கு நகர சபைத் தேர்தலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பொதுஜனபெரமுன கூட்டமைப்பு 9 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு 7 உறுப்பினர்களையும் கொண்டிருந்தன. ஆனால் இறுதி நேரத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் ஒரு உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறிவிட, இரு தரப்பும் தலா 8 உறுப்பினர்களை கொண்டிருந்தன. அங்கு திருவுளச்சீட்டு குலுக்கிப் போட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு நகரசபைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் காரைதீவு பிரதேச சபையிலும் திருவுளச்சீட்டே தலைவரை தீர்மானிக்கிறது.

இப்போதைக்கு ஒருசில சபைகளிலேயே ஆட்சி அமைக்கப்பட்டு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல சபைகளில் ஆட்சி இன்னமும் அமைக்கப்படவில்லை. அதற்கு பல நாட்கள் பிடிக்கலாம். ஆனால், ஆட்சி அமைத்தாலும், பல சபைகளில் இரு தரப்பும் சமமான பலத்தை கொண்டிருக்கும் நிலையில் ஆட்சியை எவ்வாறு சுமூகமாக கொண்டு செல்வார்கள் என்பதுதான் பெரும் பிரச்சினையாக இருக்கப்போகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்