இலங்கை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மான விவாதங்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகிவிட்டன.

இன்று இரவு 9.30 மணியளவில் அதுகுறித்த வாக்கெடுப்புக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கட்சிகள் தமது நிலைப்பாட்டை ஓரளவு அறிவித்திருக்கும் நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைந்துபோயுள்ளதாகவே நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

எண்ணிக்கையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளாக இங்கு பிரதமரின் ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனாதிபதியின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுமே இருக்கின்றன.

சிறிய கட்சிகளான எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தந் தலையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஏனைய முஸ்லிம் கட்சிகள் பிரதமருக்கு ஆதரவை வெளிப்படுத்திவிட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக இல்லாவிட்டாலும் இன்று அவையில் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூட பிரதமருக்கும், அவரது ஆட்சிக்கும் 5 ஆண்டுகளுக்கான மக்கள் ஆணை வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அதனை மதிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

ஆகவே இங்கு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சிறிய கட்சிகளின் ஆதரவு கிடையாது என்ற நிலைமை உருவாகிவிட்டது.

பெரிய கட்சிகளில் ஒன்றான, ஜனாதிபதி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் முற்றாக முடிவெடுக்காமல் குழப்பமாகவே இருக்கின்றது.

ஜனாதிபதியின் நெருங்கிய ஆதரவாளர்கள் சுமார் 10 பேர் வரை பிரதமருக்கு ஆதரவாக உள்ளனர். அடுத்த கட்டமாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி போன்ற சிலர் வாக்கெடுப்பை புறக்கணிப்பது என்று முடிவெடுத்துள்ளனர். தாம் வாக்களிப்பில் கலந்துகொள்ளமாட்டோம் என்று பௌசி அறிவித்துள்ளார்.

ஆனால், உடனடியாக அவரது கட்சியை சேர்ந்த மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களான லக்‌ஷமன் யாப்ப அபேவர்த்தன மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் தாம் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக கூறியுள்ளனர். ஆகவே ஜனாதிபதியின் கட்சி மூன்று பிரிவாக உள்ளது.

தீர்மானத்தை கொண்டுவந்துள்ள ராஜபக்‌ஷ கட்சிக்கு 51 உறுப்பினர்கள் நேரடியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரையும், சுதந்திரக் கட்சியின் சிலரையும் நம்பியே இந்தக் கட்சி தீர்மானத்தை கொண்டு வந்தது. தீர்மானம் நிறைவேற்றப்பட 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஆகவே இருக்கும் நிலையில், எதிர்பாராத ஏதாவது ஒன்று இறுதி நேரத்தில் நடந்தால் ஒழிய, தீர்மானம் நிறைவேற்றப்படுவது சிரமமே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: