இலங்கை பத்திரிகையாளர் கடத்தல்: முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரல் கைது

கெய்த் நொய்யார் என்னும் செய்தியாளர் ஒருவர் கடந்த 2008ஆம் ஆண்டில் கடந்த ஆட்சியின்போது கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை குற்றப் புலனாய்வு பிரிவினர் இலங்கை ராணுவத்தின் முன்னாள் உளவுத்துறை இயக்குநர் மற்றும் முப்படை தளபதிகளின் தலைவர் (ஆர்மி சீஃப் ஒஃப் ஸ்டாஃப்) மேஜர் ஜெனரல் அமால் கருணசேகர என்பவரை கைது செய்திருக்கிறார்கள்.

அந்தச் செய்தியாளரின் கடத்தலுக்கு உதவியமை, உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை போலீஸ் தரப்பு பேச்சாளரான போலீஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது, அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது சிஐடியினரின் பாதுகாப்பில் இருக்கும் அவருக்கு அங்கேயே சிகிச்சை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைது குறித்து மவுண்ட் லவினியா நீதிமன்றத்துக்கு போலீஸார் அறிவிப்பார்கள் என்றும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

படக்குறிப்பு,

கெய்த் நொய்யார் கடத்தப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம்.

தெஹிவளை பகுதியில் 2008ம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி கெய்த் நொய்யார் கடத்தப்பட்டார்.

த நேஷன்ஸ் பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்த கெய்த் அன்றைய தினம் வீடு திரும்பிய வேளை அங்கு வந்த குழு ஒன்றால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார்.

இவர் மீதான தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஆட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: