சித்திரை புத்தாண்டுக்கு முன்பு இலங்கை அமைச்சரவையில் மாற்றம்

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்போவதாக அமைச்சரவை கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களையும் நோக்கிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகும் நிலையில், இன்னமும் தமது தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை ஸ்திரப்படுத்திக்கொள்வதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்துக்கு வந்தபோது, அவரது ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த ஜனாதிபதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் உட்பட, சுமார் 16 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக, பிரதமருக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட தீர்மானம் நாடாளுமன்றத்துக்கு வரும் நாள் நெருங்குகையில், பிரதமரின் கீழ் இருந்த மத்திய வங்கி போன்ற முக்கிய நிறுவனங்களை வேறு அமைச்சின் கீழ் மாற்றி மறைமுகமான அழுத்தங்களை பிரதமருக்கு கொடுத்திருந்தார். இறுதியில் அவர், சுதந்திரக் கட்சியினர் தமது மனட்சாட்சிப்படி வாக்களியுங்கள் என்று கூற அவரது கட்சியின் 16 பேர் பிரதமருக்கு எதிராக வாக்களித்தனர்.

இப்படியான சூழ்நிலையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதமரின் கட்சிக்காரர்களுக்கும், ஜனாதிபதியின் கட்சியின் ஒரு பிரிவினருக்கும் இடையில் இப்போது முறுகல் நிலை வலுத்து வருகின்றது. இதனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காப்பாற்றப்பட்ட ஆட்சியை தொடர்ந்து தக்கவைப்பதில் பிரதமர் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்.

பிரதமரின் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது தாமே ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்தார்கள். அதனை வாபஸ் பெறுவதாக பிரதமர் கூறிய போதிலும் தாம் அதனை ஏற்கப்போவதில்லை என்று பின்வரிசைக்காரர்கள் இப்போது மீண்டும் கூறுகிறார்கள்.

பிரதமருக்கு எதிராக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீதான தமது நம்பிக்கையில்லா பிரேரணை கைவிடப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபூர் ரஃமான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்கா, ஜோன் செனிவிரட்ண, அனுர பிரியதர்ஸன யாப்ப, சுசில் பிரேம்ஜயந்த, டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேகர, துணை மற்றும் இராஜாங்க அமைச்சர்களான லக்ஸ்மன் யாப்ப அபேவர்த்தன, சுதர்சினி பெர்ணாண்டொபுள்ளே, சுசந்த புஞ்சிநிலம, அனுராதா ஜயரட்ண, தரநாத் பஸநாயக்க, டி. பி. எக்கநாயக்க மற்று துணை சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோர் மீதே தாம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்தனர்

இதற்கு பதிலடியாக பிரதமரின் அமைச்சரவை கூட்டங்களில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று இலங்கை சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்களும் கூறிவிட்டனர். அதேபோல அவர்கள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதேவேளை தனது கட்சியை சேர்ந்த சில அமைச்சர்கள் பங்கேற்காத அமைச்சரவை கூட்டத்தை நடத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், தற்போது ஏற்பட்டுள்ள முடக்க நிலையை தீர்க்க தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்துக்கு முன்னதாக (ஏப்ரல் 14) அமைச்சரவையில் மாற்றங்களை அறிவிக்கப்போவதாக கூறியுள்ளார். இந்த தகவலை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

இதற்கிடையே பிரதமருக்கு எதிராக வாக்களித்த அமைச்சர்களும் உறுப்பினர்களுமாக 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும், ராஜபக்‌ஷ அவர்களின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியே தமது எதிர்காலத்துக்கு உகந்தது என கருதுவதாகவும் ஆகவே அவர்கள் தொடர்ந்தும் ஆளும் கூட்டணியில் இருப்பது சந்தேகமே என்றும் கூறுகிறார் கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் இந்திய செய்தியாளரான பி.கே. பாலச்சந்திரன்.

ஆனாலும், அடுத்துவரப்போகும் இரு வருடங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு இதனால், பெரும் ஆபத்து இல்லை என்றும் அவர் கூறுகின்றார். மிகவும் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியே இருந்து ஆதரவு வழங்க, ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆனாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி நடத்த நேர்ந்தால் அரசியல் ரீதியாக அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்காலத்தில் பாதகமாக அமையும் என்றும் பாலச்சந்திரன் கூறுகிறார்.

நாட்டில் ஏற்பட்ட ஒரு இக்கட்டான சூழிநிலையில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் நோக்கில் முன்னணி கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் சேர்ந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்திருந்தாலும், அவற்றால் கட்சி அரசியலை விட்டு வெளியே வந்து அரசியலை நடத்த முடியாமல் இருந்ததன் காரணமாக நாட்டுக்கு அவர்களால் எதனையும் இதுவரை ஆக்கபூர்வமாக செய்ய முடியாமல் இருக்கிறது என்று கூறுகிறார் மூத்த செய்தியாளரான வீ. தனபாலசிங்கம்.

ஜனாதிபதி கட்சியின் போட்டிக்குழுவை சேர்ந்த 16 உறுப்பினர்களும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் ஏஜண்டுகள் போலவே செயற்பட்டு வந்துள்ளதாக கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஃமான், கால ஓட்டத்தில் அவர்கள் மஹிந்த ராஜபக்‌ஷ பக்கமே சாய்ந்துவிட வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார். ஆனாலும் தமது கட்சியின் ஆட்சி அதனால் வீழ்ந்துவிடப் போவதில்லை என்றே அவரும் கூறுகிறார்.

இந்த நிலையிலேயே உடனடியாக அமைச்சரவை மட்டத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சமாளிக்க ஜனாதிபதி அமைச்சரவையில் மாற்றங்களை செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தற்காலிகமாக சில பலன்களை தரலாம், ஆனால் பிரதமரும், ஜனாதிபதியும் இணைந்து சில கனதியான நடவடிக்கைகளை திட்டமிட்டு எடுக்கும் பட்சத்திலேயே அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஆட்சியை கட்டுக்கோப்பாக கொண்டுபோக முடியும் என்கிறார் பி.கே. பாலச்சந்திரன். உண்மையில் தனது கட்சிக்காரர்கள் தொடர்பில் ஜனாதிபதி கட்டுப்பாட்டை இழந்து வருகிறார் என்று அவர் நம்புகிறார்.

தற்போதைய பிரச்சினையில் இருந்து உடனடியாக மீழ்வது எப்படி என்பதுதான் இங்கு எல்லோரது கவனத்திலும் உள்ள விசயமாக இருக்கிறது. நீண்ட கால அடிப்படையில் பிரச்சினையை தீர்க்க என்ன வழி என்பது எல்லோருக்கும் குழப்பமான ஒன்றாகவே இதுவரை இருக்கின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்