காஷ்மீர் சிறுமி விவகாரம்: நியாயம் கேட்டு இலங்கையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  • 25 ஏப்ரல் 2018
காஷ்மீர் சிறுமி ஆசிஃபா பானு

காஷ்மீர் மாநிலத்தில் கத்துவாவில் ஒரு சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், அவ்விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், இன்று புதன்கிழமை மதியம் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 1500 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியினை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்தது.

பல்கலைக்கழகத்தின் கலைப்பீட கட்டடத்தின் அருகிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, பல்கலைக்கழக முன்றல் வரை சென்று திரும்பியது.

சிறுமி கொல்லப்பட்டமைக்கு இந்தப் பேரணியில் கலந்து கொண்டோர் தமது கண்டனங்களைத் தெரிவித்ததோடு, அவற்றினை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு முழக்கங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு, நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என இதில் கலந்து கொண்டோர் கோஷமெழுப்பினர்.

இந்த பேரணியின் இறுதியில், இலங்கைக்கான இந்திய தூதரக உயரதிகாரிக்கான மனுவொன்றினை, அவருக்கு அனுப்பி வைக்குமாறு கோரி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அபூபக்கரிடம் மாணவர்கள் சமர்ப்பித்தனர்.

இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் மார்ச் மாதம் தொடக்கம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையின் காரணமாக, சுமார் 45 நாட்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும், கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்து, அவர்கள் கடமைக்குத் திரும்பியதையடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை, பல்கலைகக்கழகத்துக்கு மாணவர்கள் வரத் தொடங்கினர்.

இந்த நிலையிலேயே, காஷ்மீர் சிறுமி விடயத்தில், நீதி நிலைநாட்டப் படவேண்டுமெனக் கோரி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்