வெசாக் தினம்: இலங்கை வந்த இந்தியாவின் பௌத்த புனித சின்னங்கள்

இலங்கை

பௌத்த மக்களின் புனித தினமான வெசாக் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பௌத்த புனித சின்னங்கள் இரண்டு நேற்று ஏப்ரல் 28 முதல் மே மாதம் 2 ஆம் திகதி வரை இலங்கை தலைநகர் கொழும்பில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் சாரநாத் என்னும் இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இவை கொழும்பு அலரி மாளிகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த சாரநாத்தில்தான் புத்தர் தனது முதலாவது பேருரையை ஆற்றியதாக பௌத்தர்கள் நம்புகிறார்கள்.

ஆன்மிக உறவை வளர்க்க...

இந்தியாவில் பிறந்த பௌத்த மதம் மிகவும் பெருமளவில் பின்பற்றப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. தேரோவாதம் என்னும் பௌத்தம் இங்கு சிங்கள பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றது.

அந்த நிலையில் பௌத்தர்களின் புனித தினமான வெசாக் காலத்தில் இந்தியாவில் இருந்து இந்த பௌத்த புனித அடையாளச் சின்னங்கள் கொண்டு வரப்பட்டமை இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக உறவை வளர்க்கும் நோக்கிலான ஒரு செயல் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.

மகாபோதி

சாரநாத்தின் முலகண்ட்காகுடி விகாரையில் பாதுகாக்கப்படும் சின்னங்களில் ஒன்றும் இவற்றில் அடங்கும். இந்தியாவின் மகாபோதி சங்கத்தின் நிறுவனர் இலங்கையை சேர்ந்த அநகாரிக தர்மபால என்பவராவார்.

முலகண்ட்காகுடி விகாரையை நிர்மாணித்ததில் அவரது பங்கும் அதிகமாக கூறப்படுகின்றது.கடன் அடிப்படையில் சில காலம் இலங்கையில் இவற்றை காட்சிக்கு வைப்பதற்குத் தந்ததற்காக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இந்திய மகாபோதிக்கு நன்றியை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள புத்தரின் புனித சின்னங்கள் இலங்கையில் காட்சிக்கு வைக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முதல் 2012 இல் கபிலவஸ்து என்னும் இடத்தில் இருந்த புனித சின்னங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டன.

அசோகப் பேரரசரின் மகனான மஹேந்திரன் மற்றும் மகளான சங்கமித்திரை ஆகிய இருவரும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு புத்தரின் புனிதப் பல்லை கொண்டு வந்ததை அடுத்தே இலங்கையில் பௌத்தம் பரவியதாகக் கூறப்படுவதுடன், அவர்கள் கொண்டுவந்ததாகக் கூறப்படும் புனிதப் பல், கண்டி தலதா மாளிகையில் வைத்து வழிபாடும் செய்யப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்