பிரிட்டன் ரக்பி அணி வீரர் இலங்கையில் மர்ம மரணம்

  • 14 மே 2018

நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட இலங்கை வந்த பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணியின் வீரர் ஒருவர் இலங்கையில் உயிரிழந்தார். அதே அணியைச் சேர்ந்த இன்னுமொரு வீரர் சுகவீனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

படத்தின் காப்புரிமை COLUMBUS TOURS SRI LANKA/ FACEBOOK
Image caption இலங்கை வந்த பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணி

கடந்த சனிக்கிழமை கொழும்பு CR & FC அணியுடன் நடந்த போட்டியின் பின்னர், அன்றிரவு இந்த வீரர்கள் வெளியே சென்றுள்ளனர். ஞாயிறு அதிகாலை இவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளனர்.

ஞாயிறு காலை 10 மணியளவில் இரண்டு வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக இவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவர் ஞாயிறு (மே 13) நண்பகல் 12 மணியளவில் உயிரிழந்ததாக பொலிசார் இன்று தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட அடுத்த வீரருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ரக்பி வீரர் உயிரிழந்தமை குறித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, உயிரிழந்த மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீரர்களின் குடும்பத்தாருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன், சுகாதார சேவைப் பிரிவினருடனும் இதுகுறித்து தகவல்களைப் பரிமாறி வருவதாகவும் கூறினார்.

பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணியினர், நட்பு ரீதியான ரக்பி போட்டிகள் இரண்டில் விளையாட, கடந்த மே மாதம் 9ஆம் திகதி இலங்கைக்கு வந்தனர். மே மாதம் 11ஆம் திகதி கொழும்பு 'CR & FC' அணியுடன் முதல் போட்டியில் விளையாடியது. இரண்டாவது போட்டி மே 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடற்படை அணியுடன் வெலிசர என்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ரக்பி வீரரின் மரணத்தின் பின்னர், இலங்கை ரக்பி சங்க அதிகாரியொருவரைத் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டோம். எனினும், கொழும்பு 'CR & FC' அணியுடனான போட்டியில் குறிப்பிடும் அளவிற்கு எந்தவொரு நிகழ்வும் பதிவாகவில்லை என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்