இலங்கை: வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த ஆரம்ப பாடசாலைகளை மூட அரசு உத்தரவு

இலங்கையின் தென் பிராந்தியத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தரம் 1 முதல் 5 வரையிலான பாடசாலைகளையும், முன்பள்ளிகளையும் மூடுமாறு இன்று (21) உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை பள்ளிகள்

தென் பிராந்தியத்தின் மாத்தறை, முலடியான, அகுரெஸ்ஸ, தங்காலை, வலஸ்முல்ல, காலி ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளையும், முன்பள்ளிகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை மூடுமாறு தென் பிராந்திய கல்வியமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தென் பிராந்தியத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலினால் இதுவரை அதிகமானார் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலான பிள்ளைகள் இருப்பதாகவும் இவர்கள் கராப்பிட்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இனங்காணப்படாத வைரஸ் காய்ச்சலினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதில் ஒரு வயதிற்குட்பட்ட 7 குழந்தைகள் இருப்பதாகவும், ஏராளமானோர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்றுள்ளதாக சுகாதார சேவை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தென் மாகாணத்திலுள்ள கராபிட்டிய மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த ஐந்து குழந்தைகள் உயிரிழந்தன. எனினும், இந்த மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்திருந்தார்.

வைரஸ் காய்ச்சலினால் இந்த மரணங்கள் ஏற்பட்டதா என்பதை உறுதியாகக் கூற முடியாதுள்ளதாகவும், எனினும் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Luis Enrique Ascui

உயிரிழந்த குழந்தைகளின் இரத்த மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சுகாதார அமைச்சுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, தென் பிராந்தியத்தில் இந்த வைரஸ் காய்ச்சல் பாடசாலை மாணவர்களிடையே தொற்றும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தனக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக தென் பிராந்திய கல்விப் பணிப்பாளர் எம்மிடம் தெரிவித்தார். இந்த எச்சரிக்கை கிடைத்தவுடன், பாடசாலை மாணவர், பெற்றோருக்கு இதுகுறித்து தெளிவுபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தென் பிராந்திய முன்பள்ளி மற்றும், தரம் 5 வரையிலான பாடசாலைகளை எதிர்வரும் 25ஆம் திகதி வரை மூடுமாறு இன்று (21) உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: