இலங்கையில் மழை வெள்ளம்: ஏழு பேர் பலி, மீட்புப் பணிகளில் முப்படையினர்

இலங்கையில் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் இன்று பிற்பகல் வரை 7 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 6 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இலங்கையில் மழை வெள்ளம் : ஏழு பேர் பலி : மீட்புப் பணிகளில் முப்படையினர்

பலத்த மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணிகளில், முப்படையினரை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் செயல்திட்டம் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலும், அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதிலும் துரிதமாக செயல்படுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆறுகளில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால், ஆறுகளுக்கு அண்மித்த தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

நாட்டின் வெள்ள அனர்த்தம் குறித்து அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியை தொடர்புகொண்டுகேட்டோம்.

மழை, வெள்ள, மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை தொடர்வதால் மக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.

''ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இரத்தினபுரி, களுத்துறை பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். களனி நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கிங் கங்கை, தவலம பிரதேசத்தில் அதிகரித்துள்ளது.'' 

''மண்சரிவு குறித்த எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது. இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் மக்கள் மிகவும் அவதானமாக செயல்பட வேண்டும்.'' என்று அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் மேலும் கூறினார்.

இயற்கை அனர்த்தங்களினால் இதுவரை 13,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,024 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: