ஸ்டெர்லைட்: தமிழக மக்களுக்கு ஆதரவாக இலங்கையிலும் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய மக்கள் காவல் துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இலங்கையின் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட்

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சயில் உள்ள கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்திய அரசின் செயற்பாடுகளை கண்டித்த கோஷங்கள் உள்ளடக்கிய பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கவனயீர்ப்பு தொடர்பில் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயல்பாட்டு உறுப்பினர் லீலாதேவி ஆனந்த நடராஜா கருத்து தெரிவிக்கையில், "காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆகிய நாங்கள், 462 நாட்களாக தொடர்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம் எம்மை போல சாத்வீகரீதியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராடிய 11 அப்பாவி தமிழ் மக்கள் இந்திய மத்திய அரசின் கை கூலிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இச்சம்பவம் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது,"என்று கூறினார்.

"இலங்கையில் இனப்படுகொலை நடந்தது. நாம் ஒன்றரை லட்சம் உறவுகளை இழந்தோம் பதினாறாயிரம் பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள் இந்தியாவில் நடந்த இச்சம்பவத்தை கேட்டு எங்கள் இதயம் துடிக்கின்றது. அவர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள். கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவர்களின் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்."

படக்குறிப்பு,

செவ்வாயன்று தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது எரிக்கப்பட்ட வாகனம்

"இத்திட்டம் தூத்துக்குடியில் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியதிட்டம் இத்திட்டத்தினால் இலங்கைக்கும் பாதகம் ஏற்படும் எனவே இலங்கை அரசும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஸ்டெர்லைட் திட்டத்தினை நிறுத்த முன்வரவேண்டும். இலங்கையில் தமிழ் மக்களை இரண்டாம் பிரஜைகள் போல் பார்ப்பது போல் மோடி அரசும் தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜையாக பாராமல், தமிழ் மக்களையும் தமது சொந்த பிரஜைகளாக கவனித்து அவர்களது வாழ்வுரிமையை கொடுக்கவேண்டும் அவர்களது சாத்வீக போராட்டத்துக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யவேண்டும்," என்றார் லீலாதேவி ஆனந்த நடராஜா.

இலங்கையில் வலிந்து காணமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் 462வது நாளாக தொடர்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: