இலங்கை: 500வது நாளை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

போராட்டம்

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் 500ஆவது நாளை எட்டியுள்ளது.

இன்று 500ஆவது நாளினை முன்னிட்டு, இலங்கையின் வடக்கு கிழக்கை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும், ஐக்கிய நாடுகள் சபை எங்கள் பிள்ளைகளுடன் நாங்கள் வாழும் உரிமையை உறுதி செய்வேண்டும், ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச தலையீட்டுடனான நீதி பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும், சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதகுருமார்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காணமல் ஆக்கப்பட்டவரின் உறவினர் விஸ்வநாதன் பாலநந்தினி, "500 நாட்களை நெருங்கியும் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி இந்த வீதியில் கண்ணீருடன் தொடர்ந்து போராடி வருகின்றோம். எம்மை யாருமே கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் கூட எம்மை கண்டுகொள்ளவில்லை" என்றார்.

தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட தமது உறவுகள் சிலர் பிரச்சனைகளை தீர்க்குமாறு சர்வதேச சமூகத்துக்கு அழுத்தங்களை கொடுத்துவருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், "எமது போராட்டம் தொடங்கிய பின்னர் எழு தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர். தொடர் போராட்டத்தினால் பலர் நோய்வாய்பட்டுள்ளனர். இலங்கை அரசிடம் பலமுறை எமது கோரிக்கையை முன்வைத்தும் இதுவரை இலங்கை அரசாங்கம் எமக்கான தீர்வினை தரவில்லை" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து இப்பந்தலில் அமர்ந்து போராட முடியாது என்றும் இனியாவது தங்களுக்கு நல்ல பதிலை இலங்கை அரசாங்கம் தரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்