விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை: சபாநாயகர் அறிவிப்பு

  • 4 ஜூலை 2018

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கட்சித் தலைமைக்கு அறிவித்து, சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக சபாநாயகர் கருஜயசூரிய இன்று (புதன்கிழமை) இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை MARK WILSON

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கூச்சல், குழப்பம் தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த திங்களன்று (ஜூலை 02) யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்து குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் சபாநாயகர் விவரித்தார்.

''இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்'' என இராஜாங்க அமைச்சர் சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சையான கருத்து நேற்று (03.7.2018) இலங்கை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும் என கூட்டு எதிரணியினர் கோஷம் எழுப்பினர். சபையில் நேற்று அமைதியின்மை ஏற்பட்டது. இதனால் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தடை ஏற்பட்டது. சபை நடவடிக்கைகளை இன்று காலை வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இன்று சபை அமர்வுகள் ஆரம்பித்த போது, நேற்றைய சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நடந்துகொண்ட விதம் குறித்து சபாநாயகர் கருத்து தெரிவித்தார்.

இதன்போது கருத்துரைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, ''இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து குறித்து அறியக்கிடைத்தவுடன் இதன் பாரதூரத்தை கருத்திற்கொண்டு, இதனைப் பரிசீலித்து, விசாரிக்க தேவையான நடவடிக்கையை அன்றைய தினமே எடுத்திருந்தேன். குறித்த உரையின் பதிவை எடுத்து, அதனைப் பரிசீலித்து, சபாநாயகர் என்ற வகையில் அரசியல் யாப்பு ரீதியாக என்னால் எடுக்க முடிந்த அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைமைக்கு அறிவித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன."

"இலங்கை நாடாளுமன்றம் செயற்பாட்டு ரீதியாக உலகின் முன்னுதாரணமான நாடாளுமன்றம் என்று சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், ஒரு சிலரின் மோசமான செயல்களினால் முழு நாடாளுமன்றத்தின் கௌரவத்திற்கும், நற்பெயருக்கும் பலத்த களங்கம் ஏற்படுகிறது. இதனை மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், மிகவும் மோசமாக நடந்துகொண்ட விதம் நாடாளுமன்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளேன். அரசியல் யாப்பு ரீதியாக சபாநாயகர் என்ற ரீதியில் என்னால் முடிந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன்.'' என்று சபாநாயகர் தெரிவித்திருந்தார்.''

படத்தின் காப்புரிமை Getty Images

இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

''600 போலீசாரைக் கொன்ற கருணாவிற்கு கட்சியின் உப தலைவர் பதவி வழங்கப்பட்டது. பிரபாகரனுக்கு பணம் கொடுத்து, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றோர் இன்று பேசுகின்றனர். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை சிறையில் அடைதனர்.'' என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பேசியபோது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்த கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

கூச்சலுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து உரையாற்றினார்.

''அரசாங்கத்தினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் நிலைப்பாட்டை அறிவிக்க விரும்புகிறேன். நாம் எப்போதும் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்போம். அமைச்சர் திருமதி. மகேஸ்வரன் அவர்களின் பேச்சு குறித்து நான் அறிந்தவுடன், அதுகுறித்து விசாரித்தேன். எமது கட்சியின் அரசியல் சபை நேற்று மாலை கூடியது. விஜயகலா மகேஸ்வரனைத் தொடர்புகொண்டு பேசியிருந்தேன். அவர் நேற்று யாழ்ப்பாணத்தில் சுகயீனமுற்று இருந்தார். இன்று கொழும்பு வருவதாகக் கூறினார். கொழும்பு வந்ததும் சந்திக்க வேண்டும் எனக் கூறினேன். அவரைச் சந்தித்த பின்னர், நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்.'' என்று தெரிவித்தார்.

''விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்பை மீண்டும் உருவாக்கும் தேவை இல்லை. நாட்டின் ஒருமைப்பாட்டையும், பௌத்தத்திற்குள்ள முன்னுரிமையையும் நாம் பாதுகாப்போம். நாட்டிற்குத் தேவையான, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்துள்ள அரசியல் தீர்வின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவுள்ளோம். அடிப்படை உரிமைகள் குறித்த பிரச்சினைகளும், அதிகாரத்தைப் பகிர்வது குறித்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது.'' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்:

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர் மீது நடவடிக்கை

தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும்: இலங்கை அமைச்சர் சர்ச்சை கருத்து

''நாம் ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறோம். அதற்கு முரணாக யாராவது பேசியிருந்தால், அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுப்போம். முப்படையினர் பாரிய அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர். உயிர்த் தியாகம் செய்துள்ளனர். சிங்கள, தமிழ் கட்சிகளின் தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டில் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாம் ஒரே நோக்கில் தான் இருக்கிறோம். விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பினர், நாட்டைப் பிரிக்க மட்டுமல்ல, நாடாளுமன்றத்தை செயலிழக்கவும் முயற்சித்திருந்தனர். எனினும், அதற்கு இடமளிக்கப்படவில்லை. அதேபோல நேற்றும் நாடாளுமன்றத்தை செயலிழக்க முயற்சித்தனர். அதற்கெதிராக சபாநாயகர் என்ற வகையில் நீங்கள் சரியாக செயற்பட்டிருந்தீர்கள்" என்று தெரிவித்தார்.

''இவர்களைப் போன்றவர்களுக்கு எதிராக நீங்கள் (சபாநாயகர்) கடுமையாக செயற்பட வேண்டும். இன்று கூச்சலிடுவோருக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். அமைச்சர் சரத் பொன்சேக்காவின் அரசியல் பழிவாங்கல் குறித்த கடிதத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்க வேண்டும். ஏன், பொன்சேக்காவை சிறை வைத்தனர்? நேற்று ஏன் கூச்சலிட்டனர். நியூயோர்க் ரைம்ஸ் கதையை நிறுத்தவே இவர்கள் கூச்சலிட்டனர். இதுதான் நேற்று நடந்தது. 600 போலீசாரைக் கொன்றவரை உபதலைவராக நியமித்து, பிரபாகரனைக் கொன்ற நபரை சிறை வைத்தனர்.'' என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்போது எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தமிட்டனர். அமைதி காக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்ட பின்னர் சபை நடவடிக்கைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்