"நீங்கள் ஆணா? பெண்ணா?” - விரும்பியவாறு வாழும் றிஸ்வான் சந்திக்கும் கேள்வி

"நீங்கள் ஆணா பெண்ணா என, என்னிடமே பலர் நேரடியாகக் கேட்டிருக்கின்றார்கள்" என்று கூறிவிட்டு கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார் றிஸ்வான்.

றிஸ்வான்

பெரும்பாலும் முழுமையாக முகச்சவரம் செய்த நிலையில்தான் றிஸ்வான் காணப்படுவார். ஆனாலும், நாம் அவரைச் சந்தித்த அன்றைய தினம், மெல்லிய தாடியுடன் இருந்தார்.

எங்கள் உரையாடல் முக்கியமானதொரு கட்டத்தை எட்டியிருந்தது. தயங்கித் தயங்கி பேசிக் கொண்டிருந்த அவர், திறந்த மனதுடன் உரையாடும் நிலைக்கு வந்திருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு பெண்ணைப் போல், தன்னை றிஸ்வான் ஒப்பனை செய்திருந்தார். பெண்கள் விரும்பிச் செய்யும் அலங்காரங்களோடு அவரை காண முடிந்தது.

எப்போது இப்படி மாறினீர்கள் என்று அவரிடம் கேட்டோம்; அவர் பதில் கூறினார். பதிலை பதிவு செய்வதற்கு முன்னர், றிஸ்வானைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

யார் இந்த றிஸ்வான்?

இலங்கையின் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹப்புக்கஸ்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர் றிஸ்வான்.

முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இவர், வீட்டில் மூன்றாவது குழந்தை. இவருக்கு 5 சகோதரர்கள் இருக்கின்றார்கள். றிஸ்வானுக்கு இப்போது 26 வயது.

2013ம் ஆண்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

இப்போது படிப்பை நிறைவு செய்துள்ளதாகக் கூறும் றிஸ்வான், பட்டமளிப்பு விழாவுக்காகக் காத்துக் கொண்ருக்கிறார்.

அழகுக்கலையில் ஈடுபாடு

அழகுக்கலை நிபுணராக றிஸ்வான் தொழில் செய்து வருகிறார். அதற்கான படிப்பையும் தொடர்ந்து வருகின்றார். கூடவே, சிகை அலங்கார நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படிக்கும்போது, அழகுக்கலைத் தொழிலில் தான் ஈடுபடத் தொடங்கி விட்டதாக அவர் கூறுகின்றார்.

நிலைமை மாறிவருகிறது: தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாக திருநங்கைகள்

காணொளிக் குறிப்பு,

"திருநங்கைகளுக்கு வாய்ப்புகள் அளிக்க நாங்கள் தயார்"

"தொழில் ரீதியாக மற்றவர்களுக்கு ஒப்பனை (மேக்கப்) செய்யத் தொடங்கியபோது, நானும் ஒப்பனை செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்குப் பிடித்தவாறு ஒப்பனை செய்து கொள்ளத் தொடங்கினேன். ஆனால், நான் செய்து கொள்ளும் ஒப்பனை மிகையாக உள்ளதாகவும், அது எனக்கு பெண்மைத் தோற்றத்தை தருகிறது என்றும், என்னிடம் ஏராளமானோர் கூறுகின்றனர். இருந்தபோதும், எனக்கு இது பிடித்திருக்கிறது; விரும்பியே நான் இதைச் செய்து கொள்கிறேன்" என்கிறார் றிஸ்வான்.

திருநங்கை தோற்றம்

இவருடைய அலங்காரம், நடை, உடை மற்றும் பாவனைகளை வைத்து, இவரை ஒரு திருநங்கையாகவே பெரும்பாலானோர் பார்க்கின்றனர்.

இலங்கையில் திருநங்கைகள் பற்றிய பேச்சுக்களும், புரிதல்களும் மிகக் குறைவாகவே உள்ளன. இதனால், ஏராளமான அவமானங்களையும் தொந்தரவுகளையும் றிஸ்வான் சந்தித்து வருகின்றார்.

எவ்வாறாயினும், தன்னை 'திருநங்கை' எனும் வகுப்புக்குள் சேர்த்து விடக் கூடாது என்று றிஸ்வான் கூறுகின்றார். "ஏனென்றால், நான் அப்படியில்லை" என்கிறார்.

"பெண்களைப் போன்ற செயல்பாடுகள் என்னிடம் இருந்தாலும், முழுமையாக ஒரு பெண்ணைப் போல் மாற வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு இல்லை" என வலியுறுத்தி கூறினார் றிஸ்வான்.

பாலியல் துன்புறுத்தல்கள்

இருந்தபோதும், பெண்கள் எதிர்கொள்ளக் கூடிய பாலியல் துன்புறுத்தல்களை விடவும் அதிகளவு கொடுமைகளை, ஆண்களிடமிருந்து தான் எதிர்கொண்டதாகக் கூறி, அவற்றை றிஸ்வான் விவரித்தார்.

"ஊரிலிருந்து பல்கலைகழகத்துக்கு வருவதற்காக ஒருநாள் பேருந்தில் பயணித்தேன். இரவு 10 மணி தாண்டியிருக்கும். காரை தீவு சந்திப்பில் இறங்கினேன். அங்கிருந்து பல்கலைகழகத்துக்கு 10 கிலோமீட்டர் செல்ல வேண்டும். ஆனால், அந்த வேளையில் நான் செல்வதற்கான பேருந்து எதுவும் கிடைக்கவில்லை. அப்போது, மோட்டார் பைக்கில் வந்த ஒருவர் எனக்கு உதவி செய்வதாகக் கூறி, என்னை ஏற்றிக் கொண்டார். ஆனால் அந்தப் பயணம் திசை மாறியது. அவர் என்னை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றார். நான் எவ்வளவு கூறியும் இடையில் அவர் வாகனத்தை நிறுத்தவேயில்லை” என்று றிஸ்வான் கூறினார்.

"ஆனாலும், அந்த நபர் மோட்டார் பைக்கை நிறுத்திய இடத்திலிருந்து நான் தப்பி ஓடினேன். அந்த நபர் என்னைத் துரத்தினார். நான் வயல் வெளிக்குள் இறங்கி சேற்றுக்குள் கால்கள் புதையப் புதைய ஓடினேன். பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஓரிடத்தில் மறைந்திருந்துதான் இறுதியில் தப்பித்தேன். பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்காகவே, அந்த நபர் என்னை அப்படி விரட்டினார்" என்று விவரித்தார் றிஸ்வான்.

எதிர்கொள்ளும் சமூக சிக்கல்கள்

தற்போது தனது சொந்த இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான தூரத்தில் அமைந்துள்ள அம்பாறை மாட்டம் அக்கரைப்பற்றில், வாடகை வீட்டில் றிஸ்வான் வசித்து வருகின்றார்.

"ஓரிடத்தில் அழகுக்கலை நிலையம் நடத்தினேன். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்து எனது அலங்காரத்தையும், அந்த ஒப்பனையோடு அமையும் தோற்றத்தையும் மாற்றிக் கொள்ளுமாறு என்னிடம் கூறினார்கள். வாடகைக்கு வீடு தருவதற்குக் கூட, பலரும் ஆலோசிக்கின்றனர். அப்படித் தந்தாலும், குறுகிய காலத்துக்குள் வேறு இடம் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், யாருக்காகவும் எதற்காகவும் என்னை மாற்றிக் கொள்ள நான் விரும்பவில்லை." என்று றிஸ்வான் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"எனக்காகவே நான் வாழ்கிறேன். இந்த வாழ்க்கையை எனக்குப் பிடித்ததுபோல் வாழவே விரும்புகின்றேன். நான் இப்படி என்னை மாற்றிக் கொண்டபோது, இதற்கு எதிராக எவ்வாறான பிரச்சினைகளெல்லாம் எழும் என்பதை அறிந்தே இருந்தேன். அவற்றினை எதிர்கொள்வதற்கான சக்தியும் என்னிடமுள்ளது" என்று நம்பிக்கையுடனும் பேசினார்ர் றிஸ்வான்.

றிஸ்வானின் குடும்பம்

"எவ்வாறாயினும் எனது குடும்பத்தார் என்னை ஒதுக்கிவிடவில்லை. ஆனால், எனது இந்த செயல்பாடுகளை அவர்கள் தங்களுக்கு ஏற்படும் அவமானமாகப் பார்க்கின்றார்கள். எனது நடவடிக்கைகளால் அவர்களின் எதிர்காலம் பாதிக்க படும் என்று அச்சப்படுகின்றார்கள். அதை என்னிடமே கூறியுமிருக்கின்றனர்" என்று அவர் கூறினார்.

"ஆனால், இப்படி என்னை அலங்காரப்படுத்திக் கொள்வதிலிருந்தும், இவ்வாறாக இருப்பதிலிருந்தும் என்னால் விடுபட முடியவில்லை. புகைத்தல், மதுபானம் அருந்துதல், போதைப்பொருள் பழக்கம் போன்றவற்றுக்கு மனிதர் அடிமையாகுவதைப் போல், இப்படி ஒப்பனை செய்து கொள்வதற்கு நான் அடிமையாகி விட்டேன். இதிலிருந்து நான் விடுபடவும் விரும்பவில்லை" என்கிறார் றிஸ்வான்.

அழகுக்கலைத் தொழில் மூலம் மாதம்தோறும் நல்ல வருமானம் றிஸ்வானுக்குக் கிடைக்கிறது. மூன்று, நான்கு லட்சம் ரூபாய் வரை கூட சம்பாதிக்க முடிவதாகவும் அவர் கூறுகிறார்.

இந்தியாவின் முதல் முழுமையான திருநங்கை தம்பதியினர் திருமணம் செய்ய திட்டம்

காணொளிக் குறிப்பு,

இந்தியாவின் முதல் முழுமையான திருநங்கை தம்பதி

சட்டத்துறை பட்டப்படிப்பு

கலைத்துறையில் பட்டத்தைப் பெற்ற கையோடு, சட்டத்துறையில் பட்டப்படிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஆசை றிஸ்வானிடம் உள்ளது. அதற்கு தேவையான பெருந்தொகைப் பணத்தை, தனது அழகுக்கலைத் தொழில் மூலமாகவே பெற முடியும் என்றும் அவர் சொல்கிறார்.

"அரச தொழிலொன்று எனக்குக் கிடைத்தாலும், நான் இப்போது செய்து வருகின்ற அழகுக்கலைத் தொழிலை விட்டுவிடப் போவதில்லை" என்கிறார் றிஸ்வான்.

"திருநங்கைகளை புரிந்து கொள்ள முன்வர வேண்டும்"

அவரின் இந்த துணிவு மற்றும் நம்பிக்கைகளுக்கு இடையே, இறக்கி வைக்கப்படாத ஏராளமான சோகங்கள் இருப்பதையும் அவரின் பேச்சில் மறைந்திருப்பதை கவனிக்க முடிந்தது.

"என்னில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடனும், என்னில் நான் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்களுடனும் யாருக்கும் எந்தவிதமான கெடுதல்களுமின்றி நான் வாழ விடும்புகிறேன். அதை ஏன் இந்த சமூகம் தடுக்கிறது?" என்று றிஸ்வான் கேள்வி எழுப்புகிறார்.

இங்கு எழுதியவற்றை விடவும் எழுதப்படாத, எழுத முடியாத ஏராளமான கேலிகள், அவமானங்கள், துன்புறுத்தல்களை தினமும் சந்தித்துக் கொண்டுதான் தான் 'விரும்பிய' வாழ்க்கையை றிஸ்வான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :