இலங்கை: ராஜபக்ஷ தலைமையில் எதிர்க்கட்சியினர் நடத்திய சத்தியாகிரக போராட்டம் நிறைவு
இலங்கையின் வர்த்தகத் தலைநகர் கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் நள்ளிரவு 1 மணியளவில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சொத்துகள் விற்பனை, விலைவாசி அதிகரிப்புக்கு மக்கள் மீது வரிச் சுமையை சுமத்துதல் உள்ளிட்ட இன்னும் பல பிரச்சனைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் 'ஜனபலய கொலம்பட்ட' (கொழும்புக்கு மக்கள் பலம்) என்ற தொனிபொருளில், இந்த எதிர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
கொழும்பின் மையப்பகுதியான லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தை நோக்கி நேற்று மதியம் தொடங்கி பேரணியாக வந்த மக்கள் அங்கு வீதியை மறித்து சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பஹா, புத்தளம், ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை, நுவரெலியா, அம்பாறை, மஹியங்கனை, அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், இரத்தினபுரி, மொனராகலை, பதுளை ஆகிய பிரதேசங்களிலிருந்து இந்தப் பேரணியில் பங்கேற்க பொதுமக்கள் கொழும்பை வந்தடைந்தனர்.
பிற்பகல் 2 மணிமுதல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்புத் தலைநகரை நோக்கி வர ஆரம்பித்ததால், கொழும்பின் மையப் பகுதிகளில் வர்த்தக செயற்பாடுகள் முடங்கின.
வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பை வந்தடைந்த மக்கள் ஆங்காங்கே பேரணியாகத் திரண்டு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தை சென்றடைந்தனர்.
அங்கு மாலை 4.30 அளவில் பேரணியை ஆரம்பித்தனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களும் பேரணியில் பங்கெடுத்தனர்.
இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் சுமார் 10 முதல் 15 ஆயிரம் வரை மக்கள் கூடியதாக உள்நாட்டு ஊடகங்கள் அறிக்கையிட்டன.
எனினும் நேரம் செல்ல செல்ல போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் கலைந்து சென்றுவிட்டதை காணக்கூடியதாக இருந்தது.
முன்னதாக, செப்டம்பர் 05ம் தேதி கொழும்பில் நடத்தப்படும் பேரணியில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அணியினர் கூறியிருந்தனர்.
அரசாங்கம் பேரணிக்கு இடையுறு விளைவிக்கும் என்பதால், பேரணி எங்கே இடம்பெறப் போகிறது என்பதை, முன்கூட்டியே அறிவிப்பதில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்திருந்த இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போராட்டக்காரர்கள் கொழும்புக்கு வருவதற்கு இந்த அரசாங்கம் முழு சுதந்திரம் வழங்கியுள்ளது எனவும், எந்த வகையிலும் அவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை எனவும் கூறியிருந்தார்.
ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என அவர் அறிவுறுத்தல் வழங்கினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதை குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டபோது இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் அமைதியாக பத்திரிகை படித்து கொண்டிருந்த புகைப்படமொன்று நேற்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
பேரணியை முன்னிட்டு கொழும்பின் பாதுகாப்பு நேற்று காலை முதலே பலப்படுத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதி செயலகம் உட்பட, கோட்டை பகுதியில் உள்ள முக்கிய மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் பேரணியில் பங்கேற்றவர்களை தடுக்கும் முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
கொழும்பு நகரின் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, போலீஸாரின் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. கலகம் அடக்கும் போலீஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், கறுவாத்தோட்டம், கோட்டை, நாடாளுமன்றம் உள்ளிட்ட இடங்களிலேயே தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த, கூலி தொழிலாளர் ஒருவர் கூறுகையில்,
''நாளாந்தம் உழைத்து உண்ணும் தன்னைப் போன்ற தொழிலாளர்களே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியினால் பாதிப்படைந்துள்ளோம்'' என்று கூறினார்.
“அரசியலுக்காக இவ்வாறு நாளாந்தம் உழைத்து உண்ணும் தொழிலாளர்கள் குறித்தும் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடும் கனவுடன் கூட்டு எதிர்க்கட்சியினர் புதன்கிழமை கொழும்பில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் தோல்வியில் நிறைவடைந்ததாக இலங்கையின் இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்