இந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்: இலங்கையில் ஏற்படும் தாக்கம் என்ன?

''கொழும்பு மருதானையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் முத்தமிட்டுக் கொண்டதாக குற்றம் சுமத்தி, இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு 2016 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டிருந்தால், ஒருபாலுறவு என்பதை தண்டனைச் சட்டப் பிரிவில் இருந்து அகற்றிக் கொள்ளும் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் என ஒருபாலுறவு சமூகத்திற்காக குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் மனோஜ் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ABHISHEK N. CHINNAPPA/ REUTERS

இந்தியாவில் ஒருபாலுறவை தண்டனைக்குரிய சட்டப் பிரிவில் இருந்து அகற்றி இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இலங்கையிலுள்ள ஒரு பாலுறவு சமூகத்திற்கும் நம்பிக்கையைத் தந்துள்ளது. ஆனால், இந்தியாவைப் போன்று இலங்கையிலும் தண்டனைச் சட்டப் பிரிவில் இருந்து ஒருபாலுறவு விவகாரத்தை நீக்கிக் கொள்ள இன்னும் உறுதியோடு போராட வேண்டியிருப்பதாக பி.பி.சி. தமிழிடம் பேசிய மனோஜ் தெரிவித்தார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவில் ஒருபாலுறவு உள்ளடக்கப்பட்டிருந்தது. இதேபோல இலங்கையில் 365-365A பிரிவுகளில் ஒருபாலுறவு குற்றமெனக் கருதப்படுகிறது.

இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும், அதற்குக் கிடைத்த வெற்றியும் இலங்கையில் எந்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் இங்குள்ள ஒருபாலுறவு சமூகத்தின் எதிர்காலம் குறித்தும் ஆராய்ந்தோம்.

இந்தியாவில் ஒருபாலுறவு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கும், இந்தியாவிற்கும், இலங்கையின் நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் வாழ்த்துக்களை இலங்கையில் ஒரு தரப்பினர் எதிர்மறையாக விமர்சித்தனர்.

''ஒருபாலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்பது வேறு, ஒருபாலுறவு திருமணத்தை அனுமதிப்பது என்பது வேறு'' இதனைப் புரிந்துகொள்ளாத சிலர், அமைச்சரின் டுவிட்டர் பதிவை விமர்சிப்பதாக அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் குறிப்பிட்டார்.

ஒருபாலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்பதைக்கூட இந்தச் சமூகத்தில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது கவலையளிக்கிறது என மனோஜ் கூறினார்.

ஒருபாலுறவு குறித்த இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்தும், இலங்கையிலுள்ள ஒருபாலுறவு சமூகத்தின் உணர்வுகள் குறித்தும் மனோஜ் மேலும் கூறினார்.

''இந்திய எல்.ஜி.பி.டி. சமூகத்தின் துணிச்சல் இலங்கையில் உள்ளவர்களுக்கும் வேண்டும். இந்தியாவில் கிடைத்துள்ள வெற்றி, இலங்கையில் ஒரு பாலுறவு சமூகத்திற்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. உற்சாகமடையச் செய்துள்ளது. ஆனால், இதுகுறித்து ஒருபாலுறவு சமூகத்தில் உள்ளவர்கள் குறைவாகவே அறிந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் இவர்களை வெறுப்புடன் பார்க்கின்றனர். கலை, சினிமா ஆகியவற்றில் ஒருபாலுறவு குறித்து இன்னும் அதிகமாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்தியாவில் வழங்கப்பட்டதைப் போன்ற ஒரு தீர்ப்பு இலங்கையிலும் வரவேண்டும். அது எப்போது நடக்கும் என்பதுதான் தெரியவில்லை. காரணம் இலங்கையில் தமது உரிமைகளுக்காக ஒரு பாலுறவு சமூகத்தினர் போராடத் தயங்குகின்றனர்,'' என்றார்.

எதனால் இந்தத் தயக்கம் இருக்கிறது எனக் கேட்டோம். அதற்குப் பதிலளித்த மனோஜ்,

இந்தியாவில், இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதற்கு முதல் காரணம் அவர்கள் தைரியமாகப் போராட முன்வந்தனர். ஆனால் இலங்கையில் ஒருபாலுறவு சமூகத்தினர் தமது உரிமைகளுக்காக போராடத் தயங்குகின்றனர்.

ஒருபாலுறவில் ஈடுபடுவோர், தமது உரிமைக்காக போராட முன்வருவார்களா?அவ்வாறு முன்வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது யார்?அவர்களின் பெயர், அடையாளங்கள் ஊடகங்களில் வருவதை அவர்கள் விரும்புவார்களா? இது எனது உரிமை என்பதை அவர்கள் உணர்ந்து போராட முன்வருவார்களா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இருக்கின்றன.

இலங்கையில் ஒருபாலுறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி பலர் கைதுசெய்யப்பட்டனர். இவற்றில் மூன்று வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்திற்கு வந்தன. இவற்றில் இரண்டு வழக்குகள் விசாரிக்கும் முன்பே மீளப்பெறப்பட்டன. ஒரே ஒரு வழக்கு மட்டுமே விசாரிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. மருதானை பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் முத்தமிட்டுக் கொண்டதாக குற்றஞ்சுமத்தி இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள், 365 தண்டனைச் சட்டம் காலாவதியான சட்டம் எனக் கூறி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தனர்.

இந்த வழக்கு இறுதிவரை விசாரிக்கப்பட்டிருந்தால் ஒருபாலுறவை ஆதரிப்பவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும் என நம்புகிறோம். மிகச் சிறந்த வாய்ப்பு கைநழுவிப் போனது. இலங்கையில், ஒருபாலுறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்படுவர்களுக்கு எதிராக 365 தண்டனைச் சட்டப் பிரிவில் வழக்குத் தொடரப்படுவதில்லை. அவ்வாறு தொடரப்பட்டால் உரிமைகளை வெற்றிகொள்ளும் வாய்ப்பு ஒருபாலுறவு சமூகத்திற்கு இருக்கின்றது,'' என்றார்.

இலங்கையில் ஒரு பாலுறவு சமூகத்தினர் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்கள் குறித்து இலங்கையின் சட்டத்தரணி ரதிகா குணரத்ன தெரிவித்தார்.

''இந்தியாவில் 377. இலங்கையில் 365-365A. இவ்வளவுதான் வித்தியாசம். தன்மை ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஒருபாலுறவு குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன.

இலங்கையில் அவ்வாறு வழக்குகள் பதிவுசெய்யப்படுவது குறைவாகவே இருக்கிறது. ஒருபாலுறவு கொள்பவர்கள் கைது செய்யப்படும்போது அவர்கள் அச்சுறுத்தப்பட்டு விடுவிக்கப்படுவதே வழக்கமாக உள்ளது. ஆகவே ஒருபாலுறவு சமூகத்தினர் மீதான வழக்குகள் குறைவாக இருக்கின்றன. அதனால் இந்தியாவில் போராடியதைப் போல இலங்கையில் வெற்றிபெறுவதற்கு இன்னும் நீண்ட நாட்கள் போராடி வேண்டியிருக்கும்.'' என்றார்.

இலங்கையில் ஒருபாலுறவு குறித்த எதிர்ப்பு பெருமளவில் காணப்படுகிறது. ஒருபாலுறவு என்பது எமது கலாசாரத்தை சீரழிக்கிறது. எமக்கென தனியான கலாசாரம் இருக்கிறது. மேற்கத்தேய கலாசாரம் எமக்குத் தேவையில்லை. ஒருபாலுறவை ஆதரிப்பது எமது கலாசார, பண்பாட்டை சீரழிக்கும். அதனாலேயே ஒரு பாலுறவு என்பதை வெறுகிறோம் என இதனை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

ஒருபாலுறவு உணர்வு சம்பந்தப்பட்டது என எல்.ஜி.பி.டி. சமூகம் கூறுகிறது. ஆனால் இதனை குற்றமாகவே சமூகத்தில் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். இது உரிமை சார்ந்த விடயம். இதற்காக போராட வேண்டும். இதனை ஒருபாலுறவுச் சமூகம் புரிந்து, தமது உரிமைகளுக்காகப் போராட முன்வர வேண்டும். இதுகுறித்து சமூகத்தில் இன்னும் அதிகமாகவும் ஆழமாகவும் பேச வேண்டியிருக்கிறது,'' என்றார் ஒருபாலுறவு சமூகத்திற்காக குரல் கொடுத்துவரும் சுபுன் சம்பத்.

இதுகுறித்து அரசாங்கத்தின் சமூக நலன்புரி அதிகாரியொருவரிடம் பேசியபோது, சட்டப்புத்தகத்தில் இந்த சட்டப் பிரிவு இருந்தாலும். இது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. பொது கலாசாரத்தைப் பாதுகாக்கவே இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது'' என்று கூறியதுடன் முடித்துக்கொண்டார்.

இலங்கையில் கடந்த 24 வருடங்களாக ஒருபாலுறவு குறித்து பேசப்படுகிறது. ஆனால் ஆக்கபூர்வமான இடத்திற்கு வந்துவிட்டோமா என்ற கேள்வி மட்டுமே எஞ்சியிருக்கிறது. இது வருத்தமானதுதான். தனி நபரின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டங்கள் செயல்படுத்தப்படுவது அடிப்படை மனித உரிமை மீறலாகவே கணிக்கப்பட வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை வழங்க 2017ஆம் ஆண்டு ஜனவரி காலப் பகுதியில் 32 நிபந்தனைகளை விதித்தது. இதில் முக்கியமாக ஒருபாலுறவு சமூகத்தினருக்குப் பாதகமான 365-365A என்ற தண்டனைச் சட்டப் பிரிவை நீக்குமாறு நிபந்தனை இருந்தது.

இந்த நிபந்தனையை தற்போது நிதியமைச்சராக இருக்கும் மங்கள சமரவீர ஏற்றிருந்தார். இதில் மாற்றம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதியைக் கோரி பத்திரமொன்றைத் தாக்கல் செய்தார். அமைச்சரவையில் இருந்த ஏனைய அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டது.

இந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதியளித்து, இந்த விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் ஒருவேளை, இந்தியாவிற்கு முன்னதாகவே இலங்கையில் ஒருபாலுறவு, தண்டனைச் சட்டப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டிருக்கும்'' என்று ஒருபாலுறவு சமூகத்திற்காக குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் மனோஜ் கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :