கோத்தாபய ராஜபக்ச வெளிநாடு செல்லத் தடை

கோத்தாபய படத்தின் காப்புரிமை Lahiru Harshana
Image caption கோத்தாபய

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு இலங்கையின் விசேட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோதாபய ராஜபக்சவின் தந்தை டி.ஏ.ராஜபக்சவிற்கு நினைவு ஸ்தூபி, அருங்காட்சியம் ஆகியவற்றை அமைப்பதற்காக 33 மில்லியன் ரூபாய் அரசாங்கப் பணம் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் கோதாபய ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக 'நிரந்தர நீதாய நீதிமன்றம்' என்ற பெயரில் விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 10) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேரும் ஆஜராகினர்.

இந்த ஏழு பேருக்கு எதிராக அரச சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகள் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.

கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட சந்தேக நபர்கள் தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த 7 பேருக்கும் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்