இலங்கை: இந்து கோயில்களில் விலங்குகள் பலியிட தடை

பலியிடப்படக் காத்திருக்கும் ஒரு சேவல். படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் உள்ள இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக்கத்தை தடை செய்ய அந்நாட்டு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.

இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த முடிவுக்கு வந்துள்ளது அமைச்சரவை.

இந்து சமய விவகார அமைச்சர் முன்மொழிவை ஏற்று இந்து கோயில்களில் விலங்கு பலிக்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்ததாக அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் ரஜித்தா சேனரத்னே பிபிசியிடம் தெரிவித்தார்.

பெரும்பான்மையான இந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைப்புகளும் இந்த முடிவுக்கு ஆதரவளித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்து, முஸ்லிம் மத விழாக்களில் விலங்குகளை கொல்வதை எதிர்த்து விலங்கு உரிமை செயற்பாட்டாளர்களும், புத்தமத நிறுவனங்களும் குரல் கொடுத்துவந்தன.

ஆடு, கோழி, எருமைக் கன்றுகள் இவ்விழாக்களில் கொல்லப்படும்போது இந்த எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

கடந்த ஆண்டு இந்துக்கள் அதிகம் வாழும் யாழ்ப்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் கோயில்களில் விலங்குகளைப் பலியிடத் தடை விதித்தது.

அந்த தடை தங்கள் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதாக விலங்குகளை பலியிடும் இந்து கோயில்களின் நிர்வாகத்தினர் வாதிட்டனர். பல நூற்றாண்டுகால பலியிடும் வழக்கத்தை தொடர அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

தமிழ்நாட்டில்...

இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களில் ஆடு கோழி போன்ற விலங்குகள், பறவைகளைப் பலியிடுவதற்கு தடை விதித்து 2003 ஆகஸ்டு மாதத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு உத்தரவிட்டது. இந்த தடை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அசைவம் உண்பவர்களின் உணவு மற்றும் வழிபாட்டு உரிமை மீதான தாக்குதலாக இது பார்க்கப்பட்டது.

2004ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்ததற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில் இந்த தடையும் உண்டு. இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்