இலங்கை ஒலுவில் துறைமுகம்: மக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக போராட்டம்

  • 9 அக்டோபர் 2018
ஒலுவில் துறைமுகம்: மக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக தொடர் போராட்டம்

இலங்கையின் அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றக் கூடாது என்கிற கோரிக்கையை முன்வைத்து, ஒலுவில் பிரதேச மக்கள் கடந்த சனிக்கிழமை முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒலுவில் துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் தங்கியிருந்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலுள்ள படகுகள் பயணிக்கும் வழியை மணல் மூடியுள்ளது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாத நிலை உள்ளது.

கடந்த வாரம் ஒலுவிலுக்கு வந்திருந்த துறைமுகங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்ற வாக்குறுதியளித்தார்.

இந்த வாக்குறுதியைத் தொடர்ந்து, தமது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடல் அரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு வழி செய்யாமல், மீன்பிடித் துறைமுக படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றக் கூடாது என ஒலுவில் பிரதேச மக்கள் அமைதிப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.

ஒலுவிலில் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர்தான், தங்களது பகுதியில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக, ஒலுவில் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால் பல நூறு மீட்டர் நிலப்பரப்பில் கடல் நீர் புகுந்துள்ளதாகவும், அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்துள்ளன என்றும், ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல். ஹைதர் அலி பிபிசி தமிழிடம் கூறினார்.

ஒலுவில் பிரதேசத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்காக கடலுக்குள்ளும், கரைப்பகுதியிலும் பெரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டுள்ள போதிலும், கடல் அரிப்பின் தீவிரம் குறையவில்லை.

ஒலுவில் மட்டுமன்றி அதற்கு பக்கத்திலுள்ள நிந்தவூர் உள்ளிட்ட வேறு சில பிரதேசங்களும், இவ்வாறான தீவிர கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

இதேவேளை, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளை விட்டுள்ள மீனவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்பிடித் துறைமுகத்தில் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றி, மீன்பிடித்தொழிலை தொடர அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி இந்த மீனவர்கள் கோருகின்றனர்.

நேற்று திங்கள்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக, முக்கிய வீதியை மறித்து போராட்டம் நடத்திய மீனவர்கள், தற்போது வீதியோரம் படகுகளை நகர்த்தி கொண்டுவந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில்,போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒலுவில் துறைமுகத்தை அரசாங்கம் மூடிவிட வேண்டுமென, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதியமைச்சர் பைசால் காசிம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption பிரதியமைச்சர் பைசால் காசிம்

இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர், ஒலுவில் மற்றும் நிந்ததவூர் உள்ளிட்ட பல பிரதேசங்கள், கடலரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்தாகவும் பிரதியமைச்சர் பைசால் காசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிந்தவூரை சேர்ந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மீன்பிடித் துறைமுகத்தை மூடியுள்ள மணலை அகற்றுவதற்கு, ஒலுவில் துறைமுகத்துக்கு அரசு அனுப்பி வைத்திருந்த ரெஜர் கப்பலொன்று, பணியை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றுள்ளது.

ஒலுவில் துறைமுகத்தை முன்னிறுத்தி, மக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக தொடர் போராட்டங்களை கடந்த நான்கு நாட்களாக நடத்தி வருகிறபோதும், அரசாங்க அதிகாரிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ இதுவரையில் இந்த பிரச்சனையில் தலையிடவில்லை.

ஒலுவில் துறைமுகம் 1998ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

டென்மார்க் அரசு வழங்கிய 46 மில்லியன் யூரோ வட்டியில்லாக் கடன் மூலம், இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டது.

வர்த்தகம் மற்றும் மீன்பிடி ஆகியவற்றுக்கென இங்கு இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளபோதும், வர்த்தகத் துறைமுகம் இன்னும் இயங்க ஆரம்பிக்கவில்லை.

மீன்பிடித் துறைமுகம் மட்டுமே, பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: