இலங்கை பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ; “நான்தான் பிரதமர்” என்கிறார் ரணில்

பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் மகிந்த ராஜபக்ச
படக்குறிப்பு,

பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் மகிந்த ராஜபக்ச

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவியேற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதியாக இலங்கை சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக பதவி வகித்தார்.

அந்தக் கட்சியின் போட்டிக்கட்சியான மைத்திரிபால சிரிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருந்தது.

ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் நீடித்து வந்தன.

இந்த நிலையில் மைத்ரிபால சிரிசேன அவர்களின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, கூட்டணி அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதுடன் மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னதாக ஜனாதிபதியின் முன்பாக புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவரது பதவிப் பிரமாணம் செய்த காட்சிகளை தொலைகாட்சிகள் ஒளிபரப்பின.

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகிக் கொள்வதாக இன்று மாலை அறிவித்தது. இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

அடுத்த மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தின் அடுத்த சந்திப்பு நடக்கவுள்ளது. அன்றைய தினம் ராஜபக்‌ஷ தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்.

தற்போது மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளமையானது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருவதாக அவரது தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அடுத்துவரும் நாட்களில் அரசியலில் எவ்வாறான மாற்றங்கள் நிகழும் எனக் கேட்டபோது, புதிய பிரதமரும், ஜனாதிபதியும் பேச்சு நடத்தி அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிப்பார்கள் எனக் கூறினார்.

அடுத்து தேர்தல் நடக்குமா அல்லது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்படுமா என்பது குறித்து கேட்டபோது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் எனினும், இறுதித் தீர்மானத்தை பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் பேச்சு நடத்தி அறிவிப்பார்கள் எனவும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை இலங்கையில் நடத்தி வந்தன. இரண்டு கட்சிகளுக்கும் இடையே காணப்பட்ட முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தென் இலங்கை அரசியல் ஆய்வாளர் சிவராஜா தெரிவித்தார்.

Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றுக் கொண்டது தொடர்பாக பா.ஜ.கவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவேதான் இலங்கையின் பிரதமர் என கேபினட் செய்தி தொடர்பாளர் ரஜிதா செனரத்னெ பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், கேபினட் கலைக்கப்பட்டு விட்டதாகவும், மஹிந்த ராஜபக்ஷ தான் பிரதமர் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கிறது என பிபிசி சிங்கள செய்தியாளர் அசம் அமீன் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ரணில், தானே பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும், மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுக் கொண்டது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 19வது அரசியல் அமைப்பின் திருத்தத்தின் 49வது பிரிவின்படி தான் பிரதமராக தொடர்ந்து நீடிப்பதாக ரணில் விக்ரமசிங்கவே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது வரை, இரு தரப்பினரும் தாங்கள்தான் பிரதமர் என்று கூறி வருகின்றனர்.

படக்குறிப்பு,

மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரின் ட்விட்டர் தளங்களில், தங்களை பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு பிரதமர் இருக்கும்போது மற்றொருவரை நியமித்தது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனரத்ன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மற்றும் முப்படைகளின் அதிகாரங்களும் ரணிலிடமே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சரான ரவூப் ஹக்கீம் பேசுகையில், "இத்தகைய மாற்றம் நீடிக்க வேண்டுமா இல்லையா என்று முடிவு செய்யும் சக்தி எங்கள் கட்சிக்கும் உள்ளது" என தெரிவித்தார்.

மேலும், இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்காக தனது கட்சி நிர்வாகிகளை அழைத்திருப்பதாகவும், அதற்காக உடனடியாக நாடு திரும்புவதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை வெற்றி பெற வைப்பதில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ரணிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது.இதனை கருத்தில் கொள்ளாமல் ஜனாதிபதி முடிவெடுத்திருக்கிறார் எனவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

மங்கள சமரவீர கண்டனம்

ராஜகபக்ஷவை பிரதமராக நியமித்தது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, சட்டவிரோதமானது. ஜனநாயகத்துக்கு எதிரான அரசுக் கவிழ்ப்பு கிளர்ச்சி என்று இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

கோத்தாபய ராஜபக்ஷ வாழ்த்து

"இலங்கையின் புதிய பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு எமது இதயப்பூர்வமான வாழ்த்துகள். உறுதிமிக்க இலங்கையினை இன்றுமுதல் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்" என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Facebook பதிவை கடந்து செல்ல, 2

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 2

"இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 42(4) பிரிவுக்கு அமைய இலங்கை பிரதமராக உங்களிடம் இருந்த அதிகாரங்களை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உங்களை விலக்கிக் கொள்கின்றேன் என இதன் மூலம் அறிவிக்கிறேன்" என்று ரணில் விக்கிரமசிங்கவேவிற்கு இலங்கை அதிபர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்ற பிறகு தன் இல்லத்திற்கு சென்ற மஹிந்த ராஜகபக்ஷவை அவரது தொண்டர்கள் வரவேற்றனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இதனிடையே, இலங்கையின் அரசு தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் இரண்டு அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை இரவு நுழையும் நேரத்தில், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: