இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ரணிலுக்கு முக்கியம் - ஐதேக அறிவிப்பு

இரா.சம்பந்தன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு மிக முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக நியமக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தானே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தற்போது ரணில் - மகிந்த தரப்பினர் அரசியல் காய்நகர்த்தல்களை மும்முரமாக முன்னெடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் உத்தியோகப்பூர்வ முடிவை கட்சி இன்று சனிக்கிழமை அறிவிக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இதுவரை எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை எனவும், உரிய நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்து அறிவிப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவை எடுப்பதாக அக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கச் செய்து அதிர்ச்சி அரசியல் நகர்வை முன்னெடுத்துள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள்.

இலங்கைப் பிரதமரின் உத்தியோகபூர்வமாக வாசஸ்தலமான அலரி மாளிகையில் இன்று காலை வரை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர்.

அலரி மாளிகையின் சுற்றுச்சூழலில் அமைதியான நிலையே காணப்படுகிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் ஆசனங்களின் விபரங்கள்

ஐக்கிய தேசிய முன்னணி - 106 (ரணில் தரப்பு)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 96 (மகிந்த - மைத்திரி தரப்பு)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 16

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 6

ஈ.பி.டி.பி. - 1

சபாநாயகர்

மொத்தம் : 225

நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை நிரூபிக்க 113 பேர் ஆதரவளிக்க வேண்டும்.

ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 உறுப்பினர்கள் இருக்கின்றனர்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 7 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அனைத்து தரப்பிலும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாகவும், அது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, சட்ட ஆலோசனைகளின்படி அமையும் என சபாநாயகரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பக்கசார்பற்ற முறையில் தனது நிலைப்பாடு அமையும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: