இலங்கை: ரணில் தரப்பு எதிர்ப்பை மீறி ராஜபக்ஷவின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்குமா?

மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்த ராஐபக்ஷ இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது புதிய அமைச்சரவை நாளை (அக்டோபர் 29) நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டு மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுறுமாறு வலியுறுத்தியும் செவ்வாயன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

"பின்கதவு வழியாக ஒரு அமைச்சரவை பதவியேற்க முடியாது. ஆனால், மகிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிக்காமலேயே பிரதமராக பதவியேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை நிரூபணம் செய்துவிட்டு புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொள்ளட்டும்," என ஞாயிறன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ (இடது)

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை, பெரும்பான்மையுடன் இன்னும் பதவியில் நீடிப்பதாகவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் மஹிந்த ராஐபக்ஷவின் அமைச்சரவை பதவியேற்பது சட்டவிரோதமானது என்றும் பிபிசி தமிழிடம் பேசிய ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ரணில் அமைச்சரவையில் நிதி அமைச்சராகத் தொடர்வதாகக் கூறிக்கொள்பவருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பிற்கு அமைவாக தீர்வு - சபாநாயகர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சர்ச்சைக்கு ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, அரசியலமைப்பிற்கு அமைவாக தீர்வு காண முடியும் என இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

பக்கசார்பின்றியும் நீதியான முறையிலும் தாம் நடவடிக்கைகளை எடுப்பதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில் புத்தி சாதுர்யமாகவும் பொறுப்புடனும் அமைதியாகவும் செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

அரச நிறுவனங்களுக்குள் சிக்கல் நிலையை உருவாக்குவது, சர்வதேசத்தின் முன்னிலையில் அபகீர்த்தியை ஏற்படுத்தும். அதனால் அமைதியாக செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களிடமும் வேண்டுகோள் விடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், ISHARA S.KODIKARA / getty images

படக்குறிப்பு,

ரணில் விக்ரமசிங்கவுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய (வலது)

மைத்திரிபால சிறிசேன உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28), நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனிடையே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க வழிமொழிந்து உறுதிப்படுத்தினார்.

புதிய அரசாங்கத்தின் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, தமது ஆதரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்குவதாக இவர்கள் அறிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :