இலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடி: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

இலங்கை படத்தின் காப்புரிமை Reuters

இலங்கையில் அரசியல் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அங்கு எம் பி ஒருவரின் பாதுகாவலர், கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் அர்ஜுன ரனதுங்க, அவரது அலுவலகத்துக்குள் நுழைவதை போராட்டக்காரர்கள் தடுக்க முயன்றபோது இந்த சம்பவம் நடபெற்றது.

முன்னதாக ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தாமே பிரதமராக நீடிப்பதாக ரணில் கூறி வருகிறார்.

துப்பாக்கிச்சூடு எப்படி நடந்தது?

படத்தின் காப்புரிமை AFP
Image caption ரணில் விக்ரமசிங்க குடியிருப்பின் வெளியே திறண்டுள்ள ஆதரவாளர்கள்

சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் உள்ள தனது அலுவலகத்திற்குள் ரனதுங்க நுழைய முயன்ற போது இது நடந்தது.

துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நேரத்திற்குள் உயிரிழந்தார் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரனதுங்காவின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பதற்றங்கள்

நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேன எடுத்துள்ள முடிவினை அவர் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றும் இதனால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ ஆதரவாளர்களும், ரணில் ஆதரவாளர்களும் கொழும்பில் பல்வேறு பகுதிகளில் கூடி வருகின்றனர்.

அரசு ஊடகத்தினை ராஜபக்ஷ ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சர்வதேச தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் ஜயசூரிய கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

என்ன நடந்தது?

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். தமது கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அரசியல் செய்து, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உதவியோடு ஜனாதிபதி பதவிக்கு வந்தார் அவர்.

சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டணியையும் அவர் நடத்தி வந்தார். அந்தக் கூட்டணி ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஒரு கூட்டணி அரசை நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் இலங்கையில் நடத்திவந்தன.

சுதந்திரக் கட்சியின் மைத்ரிபால ஜனாதிபதியாக உள்ளபோதும், ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்தக் கூட்டணியில் இருந்து மைத்ரிபால-வின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெளியேறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதையடுத்து, ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தமது சொந்தக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமராக வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் மைத்ரிபால சிரிசேன.

Image caption பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் மகிந்த ராஜபக்ஷ

எதிரெதிர் துருவங்களாக இருந்த மைத்ரிபால-வும் ராஜபக்ஷவும் தற்போது ஓரணியில் வந்துவிட்டனர். மாற்றுக் கட்சியில் இருந்தாலும் இணைந்திருந்த அதிபர் மைத்ரிபாலவும்- ரணிலும் எதிரெதிர் அணிகளாகிவிட்டனர்.

இந்நிலையில், தம்மை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்றும் தாமே பிரதமராக நீடிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதனால், யார் உண்மையில் பிரதமர் என்ற அரசமைப்புச் சட்டக் குழப்பம் உருவானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :