"எனக்கும் ரணிலுக்கும் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகளே அவரை நீக்குவதற்கு காரணம்" - சிறிசேன

சிறிசேன

பட மூலாதாரம், KIRILL KUDRYAVTSEV

தன்னையும் ராஜபக்சேவயையும் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட ஒலிநாடா குறித்தும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளதால் இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்களும் சர்ச்சைகளும் நீடித்து வருகின்றன.

இந்நிலையில் ராஐபக்ஷவை பிரதமராக நியமித்தது குறித்து இலங்கை அதிபர் சிறிசேன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "நல்லாட்சி அரசாங்கம் எனும் கருப்பொருளை ரணில் விக்கிரமசிங்க மிக வெளிப்படையாகவே துஷ்பிரயோகம் செய்துவிட்டார்" என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

"ரணில் விக்கிரமசிங்க பொதுவாகவே கூட்டுச் செயற்பாடற்ற, தன்னிச்சையான தீர்மானங்ளை எடுக்கும் முரட்டுத்தனமான பிடிவாதமிக்க முறையிலேயே அரசாங்கத்தில் செயற்பட்டார்; அவரின் நடவடிக்கையால் நாட்டில் ஊழலும் மோசடியும் தலைதூக்கின" என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

மேலும் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் தனக்கும் கொள்கை ரீதியலான முரண்பாடுகள் ஏற்பட்டதோடு அல்லாமல் கலாசார வேறுபாடுகளும் ஏற்பட்டதாக சிறிசேன தெரிவித்துள்ளார்.

தன்னையும் ராஜபக்ஷவையும் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட ஒலிநாடா குறித்தும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் அதிபர் தெரிவித்தார்.

"இலங்கியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிற்கு பின்னால் என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் என் முன் எஞ்சியிருந்த ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது மாத்திரமே ஆகும்."

"தேசிய பொருளாதார சபையினை பலவீனப்படுத்துவதற்கும் அதன் செயற்பாடுகளை தடுப்பதற்கும் தன்னாலான அனைத்தையும் ரணில் செய்து வந்தார்."

"ராஜபக்ஷவின் நியமனம் அரசியல் யாப்புக்கும் முரணானது என ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும் குற்றஞ்சாட்டி வருகின்றனர் ஆனால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளின்படியும் அரசியல் யாப்புக்கு உட்பட்டுமே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" எனவும் சிறிசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை கைக்கொடுக்குமா?

முன்னதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை குற்றப் பிரேரணையொன்றின் மூலம் பதவி கவிழ்ப்பதற்கு, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி முயற்சிகளையெடுத்து வருகின்றதாகக் கூறப்படும் நிலையில், ஜனாதிபதியை இப்போதைக்கு பதவி கவிழ்ப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே உள்ளதாக, சட்டமாணியும் சட்டத்தரணியுமான எம். இத்ரீஸ் இயாஸ்தீன் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை குற்றப் பிரேரணை ஒன்றின் மூலம் பதவி கவிழ்ப்பதற்கு முன்னர், ஐக்கிய தேசிய முன்னணிக்கு 2/3 பெரும்பான்மை அவசியமாகும்.

ஆனால், தற்போது நாடாளுமன்றில் தமக்கு ஆதரவாக 113 ஆசனங்களை பெறுவதற்கே அந்தக் கட்சி அவதிப்படும் நிலையில், 2/3 பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதென்பது, சாத்தியம் குறைவானதாகும்.

மட்டுமன்றி, பொதுவாகவே இலங்கை போன்ற நாட்டில் குற்ற பிரேரணை ஒன்றினைக் கொண்டுவந்து, ஜனாதிபதியை பதவியகற்றுவது என்பது மிக கடினமான காரியமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :