இலங்கை அரசியல் நெருக்கடி : நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகருக்கு ரணில் கடிதம்

ரணில்

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI

இலங்கையில் அதிபர் சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்ஷ இன்று (திங்கள்கிழமை) பிரதமராக கடமைகளை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஜபக்‌ஷவும், அதிபரால் பதவி நீக்கப்பட்ட அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்கள் பலத்தைக் காட்டும் வகையில் நாடாளுமன்றம் எப்போது கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் உத்யோகபூர்வமாக பிரதமர் அலுவலகத்தில் அவர் தமது கடமைகளை ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி தம்மை பதவி நீக்கினாலும், அப்படி நீக்குவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்று கூறி, தாம் இன்னமும் பிரதமரே என்று கூறி வருகிறார் ரணில் விக்கிரமசிங்க. அவருக்கு நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்குமா? அவரது நிலை என்னவாகும் என்ற கேள்வியை இந்த கடமை ஏற்பு விழா எழுப்பியுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரி, 126 உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினைக் அளித்துள்ளதாக, ரணில் விக்ரமசிங்க தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், FACEBOOK / RANIL WICKREMESINGHE

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியினை அரசியலமைப்புக்கு இணங்க தீர்த்து வைக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

"இலங்கையின் பிரதமர் எனும் வகையில், நாட்டின் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையினையும் மீட்டெடுப்பதற்காகவும், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அனைத்து கட்சிகளையும் நாடாளுமன்றத்தில் ஒன்று கூடுமாறு நான் அழைக்கிறேன்" என ரணில் விக்ரமசிங்க, தனது பேஸ்புக் பதிவின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சபாநாயகர், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள தனக்குரிய உரிமைகளைப் பயன்படுத்துவார் என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் அவர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவார் எனவும் தான் எதிர்பார்ப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் ஜனாதிபதியாக இலங்கை சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கிற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்து வந்தார்.

படக்குறிப்பு,

கடமை ஏற்கும் ராஜபக்ஷ.

அந்தக் கட்சியின் போட்டிக்கட்சியான மைத்திரிபால சிறிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருந்தது.

ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் நீடித்து வந்தன.

இந்த நிலையில் மைத்ரிபால சிரிசேன அவர்களின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, கூட்டணி அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டதுடன் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்தார் சிறிசேன.

அமெரிக்கா அறிக்கை

இலங்கையில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் குறித்து கவனித்து வருவதாகத் தெரிவித்த அமெரிக்கா, சபாநாயகருடன் கலந்தாலோசித்து நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதையை கேட்டுக் கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசை யார் முன்னெடுத்து நடத்துவது என்று தீர்மானிக்க ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாக அமெரிக்கா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :