இலங்கை அரசியல்: எப்படி அமையும் எதிர்காலம்?

  • அகிலன் கதிர்காமர்
  • செயற்பாட்டாளர்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

இலங்கையில் 2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் நாட்டில் மிகப் பெரிய ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவந்தது. நாட்டின் பிற பகுதிகளுக்கு எப்படியோ, வடக்குக்கும் கிழக்கிற்கும் இது இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் போல இருந்தது.

2014ஆம் ஆண்டில்கூட வடக்கிலும் கிழக்கிலும் இருந்தவர்கள் ராஜபக்ஷே அரசுக்கு எதிராக சிறிய விமர்சனத்தை முன்வைக்கக்கூட பயந்தார்கள். அந்த அளவுக்கு அச்சம் பரவியிருந்தது. ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் இவையெல்லாம் மாறின. மக்கள் பல கோரிக்கைகளுக்காக தெருவில் இறங்கி போராட்டங்களை நடத்தினார்கள். கேள்வியெழுப்பினார்கள். ஜனநாயகம் குறித்த நம்பிக்கை ஏற்பட்டது.

2015ஆம் ஆண்டு தேர்தல்களின்போது மைத்திரிபால சிறிசேனவும் ரணிலும் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பது, ஊழல்செய்தவர்களைக் கண்டறிந்து தண்டிப்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளைத் தந்தார்கள். ஆனால், இவை எதுவும் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. வேண்டுமென்றே தாமதிக்கப்பட்டதாகக்கூடக் கூறலாம்.

இதில் ரணிலுக்குத்தான் முக்கியப் பொறுப்பு உண்டு. நல்லிணக்க ஆட்சியின்போது மஹிந்த ராஜபக்ஷே மீதான விசாரணைகளை ரணில் தடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டினார்.

பிரதமர் ரணில் ஏன் விசாரணைகளை முன்னெடுக்கவில்லையென்றால், இந்தக் குற்றச்சாட்டுகளால் ராஜபக்ஷேவின் செல்வாக்கு சரிந்தாலோ, அவர் சிறை சென்றாலோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையும் மைத்திரிபால சிறிசேன பக்கம் வந்திருக்கும். அதனை ரணில் விரும்பவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் விசுவாசம் மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷேவுக்கும் இடையில் பிரிந்து கிடப்பதையே அவர் விரும்பினார். அதன் மூலம்தான் மைத்திரி பலவீனமாக இருப்பார் என்று கருதினார். இதனை விரைவிலேயே மைத்திரிபால சிறிசேன உணர்ந்துகொண்டார்.

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும் வெற்றிகளைப் பெற்றது.

இந்த தோல்வியையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரச் செய்தார். அதனை ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடித்தது. இதற்குப் பிறகு இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றின. இதனால்தான் வேறு வழியின்றி தன் முன்னாள் எதிரி மஹிந்த ராஜபக்ஷேவுடன் கைகோர்க்க மைத்திரிபால முடிவுசெய்தார்.

ஜனாதிபதியாக இந்த பதவிக்காலம் முடிந்த பிறகு, மீண்டும் தான் ஜனாதிபதியாக வர விரும்பியே மஹிந்த பக்கம் சாய்ந்தார் மைத்திரி. அவரது இந்தச் செயல்பாடு சிறிதும் ஏற்கத்தக்கதல்ல. இது இலங்கையின் ஜனநாயகத்தைக் கடுமையாக பாதித்திருக்கிறது. நாடு பாசிசத்தை நோக்கிச் செல்லக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. முடிவில் மக்களே பாதிக்கப்படுவார்கள்.

அடுத்த ஆண்டில் இலங்கையில் மூன்று மிகப் பெரிய தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. நாடு முழுவதும் மாகாண சபைகளுக்கான தேர்தலும் ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் நடக்கவிருக்கின்றன. இப்போது மஹிந்த ராஜபக்ஷேவும் மைத்திரிபால சிறிசேனவும் இணைந்திருப்பதால், கட்சி முழுமையாக மஹிந்தவின் கட்டுப்பாட்டில் வரும். இதையடுத்து, நாடு முழுவதும் சிங்கள இனவாதத்தை தூண்டி, தங்கள் அதிகாரத்தை அவர்கள் அதிகரித்துச் செல்வார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிப்பது என்பதே இரு கட்சிகளின் இலக்காக இருந்தது. அதுவே விவாதப் பொருளாகவும் முன்வைக்கப்பட்டது. ஆகவே, பொருளாதாரம், அரசியல் தீர்வு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டன. ஆகவே அடுத்த தேர்தலிலாவது சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு, புதிய அரசியல்யாப்பு ஆகியவை குறித்து விவாதம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும், யார் ஊழல் செய்தார்கள், யார் துரோகம் செய்தார்கள் என்ற சச்சரவை முன்வைத்தும் தனி நபர் மோதல்களை முன்வைத்தும் தேர்தல் பிரச்சாரம் நடக்கவிருப்பது கவலைதரும் விஷயம்.

தற்போதைய அரசியல் நெருக்கடியைப் பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜனதா விமுக்தி பெரமுனவும் தெளிவான தீர்மானத்தில் இருப்பது பாராட்டுக்குரியது. வரவேற்கத்தக்கது. கூட்டமைப்பைப் பொறுத்தவரை கடந்த 4 வருடங்களாக ஒரு அளவுக்கு மத்திய அரசுடன் இணைந்து செயல்படவே நினைத்தார்கள். அதனால், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் இந்த அரசு செய்த பிழைகளை கண்டிக்கவில்லை. மாணவர்கள், தொழிற்சங்களின் போராட்டத்தை இந்த அரசு ஒடுக்கியபோது அவர்கள் கண்டிக்கவில்லை. இதனால், தமிழ் மக்களுக்கு பெரிதாக ஏதும் நடக்கவில்லை.

வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகளையும் பிரச்சனைகளையும் முன்வைத்து மக்களைத் திரட்டும் முயற்சியில் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்க வேண்டும். அதைச் செய்யவேயில்லை. இப்போது கூட்டமைப்பு ஒரு சிதறுண்ட நிலையில் இருக்கிறது. சி.வி. விக்னேஸ்வரன் பிரிந்து சென்றிருக்கிறார். அவரும் சரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற குறுந்தேசியவாதிகளும் சரி, எந்த விதத்திலும் தென்பகுதி அரசியல்வாதிகளுடன் இணைந்து செயல்படவில்லை. ஒருவகையில், மீண்டும் ராஜபக்ஷே அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றே இவர்கள் நினைக்கிறார்கள். அப்போதுதான் ராஜபக்ஷேவைக் காட்டியே தங்களுடைய குறுந்தேசிய வாதத்தைப் பேச முடியும் என நினைக்கிறார்கள்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இவர்கள் மத்திய அரசை குறைகூற மட்டுமே செய்தார்கள். அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட முன்வரவில்லை. கூட்டமைப்பு தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்ததற்கு இது மிக முக்கியமான காரணம்.

தற்போதைய சிக்கலின் மையப்புள்ளியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கிறார். தன் தலைமைத்துவத்தை விட்டுத்தர அவர் தயாராக இல்லை. 2001-2003 ஆண்டுகளில் முதன் முதலாக அவர் பிரதமரானார்.

அதற்குப் பிறகு எத்தனையோ தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்துள்ளது. இந்தத் தோல்விகளின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமல்லாமல் இலங்கையில் ஜனநாயகத்திற்கும் அவர் பின்னடைவைக் கொண்டுவந்துள்ளார். அவர் விலகியிருந்தால் அந்தக் கட்சியில் ஒரு வலுவான தலைமை தோன்றியிருக்கக்கூடும். அது ஜனநாயகத்தை வலுப்படுத்தியிருக்கும். ஆனால், அவர் அதற்கு இடம்தரவில்லை. தொடர்ந்து கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தாலும் மஹிந்த ராஜபக்ஷே ஓயமாட்டார். அவர் தேர்தலில் வல்லவர். ஆகவே, மீண்டும் சிங்கள - பௌத்த இனவாதத்தை தூண்டுவார் என்ற அச்சம் சிறுபான்மை மக்களிடம் இருக்கிறது.

இலங்கையில் விவாதிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் யாப்பைப் பொறுத்தவரை இனி பெரிதாக ஏதும் நடக்காது. ஏதாவது செய்வதாக இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்குள் செய்திருக்க வேண்டும்.

ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் மஹிந்த தோற்றுவிட்டால் பிறகு என்ன நடக்குமென தெரியவில்லை. இது தொடர்பாக அரசியல் நிபுணர்கள் பலவிதமான கருத்துகளைச் சொல்கிறார்கள். இருதரப்பும் அந்தச் சூழலை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

(யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அகிலன் கதிர்காமர், ஜனநாயகத்திற்கான செயற்பாட்டாளர். இலங்கையின் அரசியல் பொருளாதாரம் குறித்து எழுதிவருபவர். கட்டுரையை சொல்லக்கேட்டு எழுதியவர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: