இலங்கை நாடாளுமன்றம்: நீக்கப்பட்டது முதல் கலைக்கப்பட்டது வரை - நடந்தது என்ன?

இலங்கை படத்தின் காப்புரிமை Buddhika Weerasinghe

இலங்கை நாடாளுமன்றத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமென்று வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக இலங்கை அரசியல் களமானது பரபரப்புடன் காணப்படுகிறது. இதெல்லாம் தொடங்கியது அக்டோபர் 27. அன்றுதான் திடீரென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அப்போதில் இருந்து அங்கு பல மாற்றங்களும் நிகழ்வுகளும் நடந்த வண்ணம் உள்ளன. அன்றிலிருந்து இன்று வரை இலங்கை அரசியலில் நடந்தது என்ன?

அக்டோபர் 27 : இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

ரணில் விக்ரமசிங்க-வின் வாகனங்கள் மற்றும் பாதுகாப்பை பறிக்கப்பட்டது.

அக்டோபர் 28 : இலங்கை பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து வெளியேற பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க மறுப்பு.

அக்டோபர் 29 : அதிபர் சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்ஷ பிரதமராக தன் கடமைகளை ஏற்றுக் கொண்டார்.

அக்டோபர் 29 : உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க சபாநாயகருக்கு கடிதம்.

அக்டோபர் 29 : அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுக் கொண்டார்.

அக்டோபர் 30 : இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிசெய்வதற்காக உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதினார்.

நவம்பர் 1 : இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5ஆம் தேதி கூட்டுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நவம்பர் 4 : இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14ஆம் தேதி கூடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

நவம்பர் 5 : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து கொண்டனர்.

நவம்பர் 7 : 'அரசில் இணைய முடியாது' என சிறிசேனவிடம் தமிழ் கூட்டமைப்பு தெரிவித்தது.

நவம்பர் 9 : இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமென்றும் அறிவிப்பு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: