"இலங்கை ஜனாதிபதி மைத்திரி நன்றி மறந்துவிட்டார்": செல்வம் அடைக்கலநாதன் பேட்டி

மைத்திரிபால சிறிசேன
Image caption மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் நாடாளுமன்றத்தை கலைத்து, வரும் ஜனவரி 2019 தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்ல தலைவராக இல்லை என்றும், நாட்டின் பின்னடைவுக்கு வித்திட்ட மனிதராகிவிட்டார் என முன்னர் செயல்பாட்டில் இருந்த இலங்கை நாடாளுமன்றத்தின் குழுக்களின் தலைவராக விளங்கிய செல்வம் அடைக்கலநாதன் கூறுகிறார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், தனது நாட்டில் ஜனநாயக முறைமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீடீரென நாடாளுமன்றத்தை கலைத்து 2019 ஜனவரி5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

இலங்கையின் அரசியல் சாசனத்தை மீறி ஜனாதிபதியே செயல்பட்டுள்ளார். இது அரசியல் சாசனத்தை குலைக்கும் செயலாகும். நாட்டின் ஸ்திரத்தன்மை குலையும் நிலையை நாட்டின் தலைமகன் ஒருவரே உருவாக்கியுள்ளார் என்பது வருத்தம் அளிக்கிறது. இது முறையான செயல்பாடு அல்ல. ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லாத ஒரு செயலை செய்துள்ளார் மைத்திரி. அரசியல் சாசனத்தின்படி நான்கரை ஆண்டுகள் முறையான ஆட்சியை தரவேண்டிய இவர், விதிகளை மீறிசெயல்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. நாட்டின் பின்னடைவுக்கு வித்திட்ட மனிதராகிவிட்டார் மைத்திரி.

முதலில் ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய மைத்திரி, மஹிந்தவை பிரதமராக நியமித்தார். தற்போது நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் ஜனநாயக முறைமைகள் எந்த அளவில் பின்பற்றப்படுகிறது என்று எண்ணுகிறீர்கள்?

டிசம்பர் 14ம் தேதி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை மைத்திரி-மஹிந்த குழுவினர் நன்கு அறிந்துள்ளனர். மஹிந்த வெல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு. மைத்திரி தனது சுயகௌரவத்திற்கு வீழ்ச்சி ஏற்படும் என்றும் தனிமனித சுயநலத்திற்கு ஆட்பட்டும் இந்த முடிவை எடுத்துள்ளார். தமிழ்தேசிய கட்சி, ஜேவிபி, மலையகதமிழர்கள், தமிழ் முஸ்லீம்கள் என அனைவரும் மஹிந்தவுக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள் என்பதை நன்றாக உணர்ந்த ஜனாபதிபதி தனது சுயகௌரவம் போய்விடக்கூடாது என்று முடிவு செய்துள்ளார். இதன்மூலம் ஜனநாயகத்தின் விதிகள் மீறப்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒன்றை அடுத்து மற்றொரு அறிவிப்பை வெளியிட்டு பிரச்சனையை திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

2019 ஜனவரியில் தேர்தல் என்ற அறிவிப்பு மைத்திரி-மஹிந்த அணிக்கு பலம் சேர்க்கும் முடிவாக மாறுமா?

நிச்சயமாக. ஆனால் தற்போது தேர்தல் ஆணையாளர் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பின்பற்றி மட்டுமே செயல்படமுடியும் என்று கூறியுள்ளார். தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திங்களன்று ஜேவிபி மற்றும் யுஎன்பி நீதிமன்றத்தை நாடவுள்ளன. மேலும் தேர்தல் நடந்தால், அது அதிகார துஷ்பிரயோகத்திற்கான வாய்ப்பாகத்தான் அமையும். தற்போது மகிந்தவுக்கு ஆதரவு வேண்டும் என்பதற்காக பலகோடி பேரங்கள் பேசப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் தேர்தல் நடந்தால், அதில் வெற்றி பெறவேண்டும் என்ற கொள்கையோடு மைத்திரி மற்றும் மஹிந்த எண்ணுவார்கள். இது முறையான தேர்தலாக இருக்காது.

படத்தின் காப்புரிமை Twitter
Image caption செல்வம் அடைக்கலநாதன்

மைத்திரி-மஹிந்தவுக்கு பின்னணியில் யாரும் இருப்பதாக எண்ணுகிறீர்களா?

தற்போது இலங்கையில் அரசியல் சூழல் மிகவும் பலவீனமாக உள்ளது. முழுமையான காலம் ஆட்சியை நடத்துவேன் என்று உறுதி கொடுத்த மைத்திரி ஆட்சியை கலைத்துள்ளார். மஹிந்தவுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். இருவருக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கலாம் என்று எண்ணுகிறோம்.

ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் ராஜபக்ஷ பெரும்பாலும் சீனாவை சார்ந்து இருந்தார். அண்டை நாடான இந்தியாவை விடுத்து, சீனாவிடம் நட்பு பாராட்டினார். தற்போது அவர் பிரதமராக பதவி ஏற்ற போது சீனா தூதரகம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது. அடுத்ததாக பாகிஸ்தான் வாழ்த்து கூறியது. இதில் இருந்து பார்க்கும்போது, சீனாவின் பின்னணிதான் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு காரணமாக இருக்கும் என்று யூகிக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில், நீங்கள் உட்பட பலதமிழ் தலைவர்கள் உள்ளடங்கிய எதிர்க்கட்சி எந்தவிதத்தில் பொறுப்புடன் செயல்பட்டீர்கள்? எதிர்க்கட்சியின் பலனாக தமிழ்மக்கள் மேம்பாடு அடைந்துள்ளனரா?

மூன்று ஆண்டுகளில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல இடங்கள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் ஐ.நாவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த அழுத்தம் தந்தோம். காணாமல்போன அல்லது சிறையில் வாடும் தமிழர்களின் நிலையை விலக்கி பேசி, பலரின் நிலையை கண்டறிந்துள்ளோம். இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமையவிருந்த புதிய அரசியல் சாசன வரைவு திட்டத்தை வடிவமைத்தோம்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் ஏற்படாமல் இருந்திருந்தால், வரும் டிசம்பர் 7ம் தேதி, அந்த புதிய அரசியல் சாசனத்தின் இறுதி வடிவத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வேலை நடந்திருக்கும். பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தமிழர்கள் கூடி, மைத்திரிக்கு ஆதரவு தந்தோம். ஆனால் அவர் நன்றி மறந்துவிட்டார். நல்ல தலைவராக அவர் இல்லை. ஏமாற்றும் தன்மை கொண்டவராக இருக்கிறார் என்பது வருத்தம் அளிக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் அறிவுறுத்தலின் பேரில் நிலையான அரசாங்கம் அமையும் என்ற நம்பிக்கையில் மைத்திரியை ஆதரித்தோம். தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு சர்வதேச நாடுகளிடம் நியாயம் கேட்போம்.

இலங்கையில் நிகழும் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட இந்தியா எந்த விதத்தில் உதவ வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தால் அது இந்தியாவுக்குத்தான் சிக்கலாக அமையும். இந்த பிரச்னையை இந்தியா கவனமாக கையாண்டிருக்க வேண்டும். இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்செய்யும் கடமைப்பாடு இந்தியாவுக்கு உள்ளது. இலங்கையில் ஜனநாயக முறைமைகள் இல்லாமல் போகும்போது இந்தியா தனது ஆளுமை திறனைக்கொண்டு உதவியிருக்கவேண்டும். இலங்கைக்கு உதவவேண்டியது இந்தியாவின் கடமை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்