இலங்கை அரசியல் சிக்கல்: "ரணில், ராஜபக்ஷவை கட்டுப்படுத்தும் உலக சக்திகள்"

இலங்கை அரசியல் நெருக்கடி படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டவை.

சட்டத்துறையினை சார்ந்தவர் என்ற வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்?

பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமாணி அறிவிப்பினை வெளியிட்டிருப்பது வெளிப்படையாகவே நாட்டின் அரசியல் அமைப்பிற்கு முரணான நடவடிக்கையாகும்.

பாராளுமன்ற கலைப்பானது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். ஜனாதிபதியின் சட்டத்தரப்புகள் பாராளுமன்றத்தை கூட்டுவது, கலைப்பது மற்றும் ஒத்திவைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை கூறும் உறுப்புரை 33 இரண்டு சியை குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

ஆனால் உறுப்புரை 70 உப பிரிவு ஒன்றில் உள்ள காப்பு வாசகத்தில் மிக தெளிவாக பாராளுமன்றம் முதலாவதாக கூட்டப்பட்டு நான்கரை வருடங்களுக்கு பாராளுமன்றம் கலைக்கப்பட முடியாது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றபட்டு ஜனாதிபதியை கேட்டுக்கொண்டால் மட்டுமே பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே மேற்படி இரு சட்டப்பிரிவுகளையும் ஒன்றாகத்தான் படித்து பொருள்கோடல் செய்ய வேண்டும். பொதுவாக அரசியல் அமைப்பில் முறையற்ற அல்லது தெளிவற்ற விடயங்கள் இருக்க கூடும். ஆனால் இந்த பிரிவில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை தனது தற்துணிவின் பால் கலைக்க முடியாது என்பதில் எந்த மயக்கங்களும் இல்லை.

பாராளுமன்றம் கலைப்பு உட்பட அரசியல் அமைப்பினை மீறிய ஜனாதிபதியின் நடவடிக்கை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டால் நீதிமன்றம் எவ்வாறான தீர்ப்பினை வழங்கும்?

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிதிகளை மீறிய செயல் என்று ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதாக கூறுகின்றன.

நீதிமன்றம் பாராளுமன்ற கலைப்பு விடயம் விதிமுறைகளுக்கு முரணானது என்ற ஒரு முடிவினைத்தான் எடுக்கும் என்பது எனது திடமான கருத்தாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவ்வாறான தீர்ப்பு வரும் போது மீண்டும் பாராளுமன்ற கூட்டப்படும், பாராளுமன்ற கலைப்பு அறிவிப்பு ரத்துச் செய்யப்படுவதோடு, தேர்தலுக்கான அறிவிப்பும் ரத்துச் செய்யப்படும்.

மேலும் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவினை நீக்கிய விடயங்கள் தொடர்பிலும் கேள்விக்கு உட்படுத்துவார்கள்.

அத்தோடு மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கிய வர்த்தமாணி அறிவித்தல், அமைச்சு நியமனம் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கேள்விக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்ட போது அவர் நீதிமன்றத்தை நாடாதிருந்தமைக்கான காரணம் என்னவாக இருக்கும்?

பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்திற்கு ரணில் விக்கிரம சிங்க சென்றிருந்தால், அதன் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில் ரணில் விக்கரமசிங்க வேறு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்திருப்பார்.

Image caption கலாநிதி குமாரவடிவேல் குருபரன்

அந்த காலப்பகுதிக்குள் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜபக்ச வாங்கிவிடுவார் என்ற அச்சத்தில்தான் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் அதில் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் சொல்லிவந்தார்.

தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கூடுவதற்கான சந்தர்ப்பங்கள் அடியோடு இல்லாத நிலையில்தான் காலம் தாள்த்தினாலும் நீதிமன்றத்தை நாட விரும்பியுள்ளார்.

அரசியல் அமைப்பு மீறப்பட்ட நிலையில், புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வு எந்த வகையில் சாத்தியமாகும் என்று எண்ணுகின்றீர்கள்?

தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு நாட்டிற்குள் அரசியல் அமைப்பு ரீதியில் தீர்வு ஒன்று வேண்டும் என்று கோரி நிற்கும் நிலையில் தொடர்ச்சியாக அரசியலமைப்பு மீறப்படுகின்றது என்பது எதிர்காலத்தில் அரசியல் அமைப்பு ரீதியில் தீர்வு ஒன்று எட்டப்பட்டாலும், அதன் நிலைத்தகு தன்மை தொடர்பில் கேள்வி எழும் சம்பவமாக ஜனாதிபதியின் தற்கால செயற்பாடு உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக அரசியல் அமைப்பினை மீறும் நடவடிக்கைகயில் ஈடுபட்டு வருவதற்கான காரணம் எதுவாக இருக்கும்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த தேர்தலில் சிங்கள மக்களின் பொரும்பான்மையான வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்ற தாழ்வு மனப்பாங்கில் உள்ள ஒருவர்.

இந்த நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு தலைவராகவும், மஹிந்தவிற்கு ஒப்பான தலைவர் என்ற நிலைக்கு தான் வர வேண்டும் என்றும் அடுத்த தேர்தலிலும் தான் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு அச்சம் என்று மஹிந்த தரப்பினரும், அரசியல் அமைப்பினை மீறிவிட்டார்கள் என்று ரணில் தரப்பினரும் கூறும் நிலையே இப்போது உள்ளது.

அரசியல் அமைப்பினையும் ஜனநாயகத்தையும் மோத விடுகின்ற நிலையே உள்ளது.

தற்கால நெருக்கடி நிலைக்கும் நிறைவேற்று அதிகார முறமையில் மாற்றம் கொண்டுவந்தமைக்கும் இடையில் ஏதேனும் சம்மந்தம் உள்ளதா?

19 ஆவது திருத்தத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்தார் என்பது தெரிந்த விடயம். இதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் இருந்து அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரங்களை வழங்குவதாகவே அத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

தான் எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியால் பதவியில் இருந்து தூக்கி எறியப்படலாம் என்பதை ரணில் முன்னுனர்ந்தே அத்திருத்தத்தை கொண்டுவந்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வரலாற்றில் அரசியல் கட்சிகள் தமது நலன் சார்ந்தே அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டுவருவது வழமையாகும்.

அரசியல் நெருக்கடியில் பூகோள அரசியல் எந்த வகையில் செல்வாக்கு செலுத்துகின்றது?

இந்த விடயம் தொடர்பில் சீனா மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி மாற்றத்திற்கு உதவியாக உள்ளது. அமெரிக்காவும், இந்தியாவும் ரணில் விக்கரமசிங்கவின் பக்கம் நிற்கின்றன. வழமைக்கு மாறாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வெளிப்படையாக அமெரிக்கா அறிவிக்கின்றது.

நாடுகள் ஒரு விடயத்தை வெளிப்படையாக சொல்வது குறைவு, இந்த விடையத்தில் அமெரிக்கா வெளிப்படையாகவே பிதமர் நியமனம் தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டிருப்பதை அவதானித்து பார்க்க வேண்டும்.

தொடர்ந்து ராஜபக்ச, ரணில் ஊடாக பூகோள அரசியலை வெளியுலக சக்திகள் நடத்துகின்றன.

தற்போது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்திருக்கும் ராஜபக்சவினை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்க இந்தியாவும், அமெரிக்காவும் எந்த அளவிற்கு செயற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதன் விளைவாக பொருளாதார தடை , போக்குவரத்து தடை என்பவற்றை கொண்டுவருவார்களா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

போர்குற்ற காலத்தில் இவ்வாறான தடைகளை கொண்டுவர வேண்டும் என்று கேட்ட போது அமைதியாக இருந்த அமெரிக்கா தற்போது அதனை கொண்டுவருவது தொடர்பில் சிந்திப்பது யாருடைய நலன் அங்கு கருதப்படுகின்றது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்