இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: சர்வாதிகார போக்கு - மங்கள சமரவீர

இலங்கை படத்தின் காப்புரிமை Getty Images

ஜனநாயகத்திற்கு எதிரான, சர்வதிகார போக்கில் செயற்படும் மனநோயாளியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருப்பதாக, இலங்கையின் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர விமர்சித்துள்ளார்.

மேலும், தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி தரப்பினர் விலைபேசிய போது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றினை லஞ்ச - ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப் போவதாகவும், மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இறுதியாக ஆற்றிய உரை குறித்து, மங்கள சமரவீர ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த அக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புக்கு எதிரான சதியின் பின்னர், ஜனாதிபதி 3வது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருந்தார். அதில், பதவிக்காக உண்மைக்கு புறம்பாக பொய்களை சொல்லக் கூடிய, ஜனநாயகத்திற்கு எதிரான சர்வதிகார போக்கில் செயற்படும் மனநோயாளியாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பது தெளிவாகின்றது.

இந்த நாட்டில் வாழும் மக்கள் இன, மத, கட்சி பேதமின்றி, ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த அரசியலமைப்புக்கு முரணான சதித் திட்டத்தை முற்றாக நிராகரிக்கின்றார்கள். அதேபோன்று சர்வதேச சமூகம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சட்டவிரோதமான பிரதமர் உள்ளிட்ட அமைச்சர் குழுவை ஏற்றுக்கொள்ள இன்னும் முன்வரவில்லை. அந்தவகையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ஆற்றிய உரையில் இந்த நிலைமை இன்னும் உச்சமடைவது உறுதியாகியுள்ளது.

அரசியலமைப்புக்கு முரணாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உரிய காரணங்களை ஜனாதிபதி தெளிவுபடுத்துகையில்; சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதற்கு சில தரப்புகள் நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்று கூறியிருந்தார். இங்கு குறிப்பிடும் வகையில், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 100, 150 மில்லியன் ரூபாய் மட்டுமல்லாமல், 500 மில்லியன் ரூபாவிற்கும் விலை பேசப்பட்டிருந்தார்கள். இவ்வாறு நடந்துகொண்டது எமது தரப்பினரல்ல. மாறாக இந்த அறிக்கையை விடுக்கும் ஜனாதிபதியினுடைய நெருங்கிய பிரதிநிதிகளே ஆவர்.

எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை தங்களது பக்கத்துக்கு அழைத்து, அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், ஜானதிபதிக்கு நெருங்கிய பிரதிநிதிகள் மூலம் அவர் தொலைபேசி அழைப்புக்கள் விடுத்து, நினைத்துப் பார்க்க முடியாதளவு தொகையை வழங்குவதற்கு ஒப்புக்கொண்ட உரையாடல் இருக்கின்றது.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை விலைகொடுத்து வாங்கும் வியாபாரத்துக்கு தலைமைதாங்கி இருப்பது வேறு யாருமில்லை, தன்னுடைய பிழைகளை மறைக்க பொய் கூறும் ஜனாதிபதியே என்பது தெளிவாகிறது. இதுதொடர்பில், சாட்சியும் எம்வசம் உள்ளது. அவை அனைத்தையும் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியலமைப்பு குளறுபடிகள் தீர்ந்ததும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு நங்கள் தயாராக உள்ளோம்.

அதேபோன்று, 2015 ஜனவரி 07 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த பொழுது, ஐக்கிய தேசிய கட்சிக்கு 41 உறுப்பினர்கள் மாத்திரம் இருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் பெரும்பான்மை பற்றி யாரும் பேசவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AKRUWAN WANNIARACHCHI

2015 இல் 41 உறுப்பினர்கள் மாத்திரம் இருந்தாலும் அன்றிலிருந்து, எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அவரின் அரசாங்கத்திற்கும், அவரின் கொள்கைகளுக்கும் எல்லா சந்தர்ப்பத்திலும் முன்னின்றுள்ளனர் என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதனால் பெரும்பான்மை சம்பந்தமான எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

அது மாத்திரமல்லாமல் ஜனாதிபதித் தேர்தலுக்கு பிறகு 2015 ஜனவரி 20 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியது. அதன்பிறகு எங்களது அரசாங்கத்தின் முதல் வரவு - செலவுத் திட்டம் பெப்ரவரி 07 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி எமது வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 104 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் கிடைத்ததுடன் 103 பெரும்பான்மை வாக்குடன் வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோன்று, 2015 ஏப்ரல் 28ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட 19 வது திருத்த சட்டத்தின் போது, அதற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களிக்காமலும், 07 உறுப்பினர்கள் சமூகளிக்காமலும் இருந்தனர்.

அதன்படி 5/6 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இக்காலகட்டத்தில் எமக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை குறைவாக இருக்கவில்லை. அதற்காக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கவும் இல்லை. 2015 இல் இருந்து இதுவரையில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற எல்லா வாக்கெடுப்புக்களிலும் வெற்றியடைந்துள்ளோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் பிரதமருக்கு விரோதமாக சூழ்ச்சி செய்யப்பட்டு, முன்னெடுத்த நம்பிக்கையில்லாப் பிரேரனையிலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில், வெற்றிபெற ரணில் விக்கிரமசிங்கவினால் முடிந்தது. அந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் 26 சமூகளிக்காத உறுப்பினர்களும் உள்ளடங்கலாக 46 கூடிய வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதனடிப்படையில், நாடாளுமன்றத்தில் ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை தொடர்பாக எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. அதன்படி ரணில் விக்கிரமசிங்கவின் நாகரீகத் தன்மை, கலாசாரம் மற்றும் குடும்ப பின்னணியைக் கொண்டு கோபம் மற்றும் ஆக்ரோஷம் அடைந்த ஜனாதிபதி, சட்டபூர்வமான பிரதமரை அகற்றியதும், நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்ததும் முழுமையாகக் கலைத்தலும், சர்வதிகாரத்தனமாக நடவடிக்கை என்பது தெளிவாகின்றது என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: