'என் வாழ்நாளில் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை' - சிறிசேன

(கோப்புப்படம்) படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்தபோது அவரது பொறுப்பின் கீழ் நடந்த, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த ஊழல், மோசடிகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தமது வாழ்நாளில் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் எக்காரணம் கொண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.

இலங்கையிலுள்ள சர்வதேச ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களை இன்று சந்தித்தபோது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணத்தையும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விளக்கியிருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமிக்கவே தான் விரும்பியதாகவும், அவ்வாறு இல்லையெனில் இரண்டாவது தெரிவாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்க விரும்பியதாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.

இவர்கள் இருவரும் பிரதமர் பதவியை ஏற்க மறுத்ததால் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''பிரதமர் பதவியை ஏற்றுமாறு இருவரிடம் கேட்டேன். அவர்கள் இருவரும் அதற்கு முன்வரவில்லை. வேறொரு தெரிவு எனக்கு இருக்கவில்லை. அதனால் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தேன்'' என்று ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு ஜனாதிபதி பதிலளித்தார்.

பிரதமரை பதவி நீக்கியமை, புதிய பிரதமரை நியமித்தமை, நாடாளுமன்றத்தைக் கலைத்தமை ஆகியவற்றை சட்டரீதியாகவே செய்ததாகவும், நாடாளுமன்றத்தைக் கலைத்ததை சவாலுக்கு உட்படுத்தினாலும், பிரதமர் பதவியில் இருந்து ரணில்விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சவை நியமித்ததை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தவில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் மகிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட முறை குறித்தும் ஜனாதிபதி பேசினார். ''நாடாளுமன்றத்தில் நிலையியற்கட்டளையின்படி மூன்று முறைகளில் வாக்கெடுப்பு நடத்த முடியும்.''

குரல் மூலம் வாக்கெடுப்பு நடத்தலாம். இரண்டாவது, எம்.பிக்களின் பெயர்களை அழைத்து, ஆம் அல்லது இல்லை என்ற தெரிவின் மூலம் வாக்கெடுப்பு நடத்தலாம். மூன்றாவது இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தலாம். அரசாங்கம் ஒன்றின் மீது நம்பிக்கை இல்லாதபோது, குரல் மூலம்வாக்கெடுப்பு நடத்தாது, இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்துமாறு நான் கூறியிருந்தேன். எனினும், இறுதி அமர்வின்போது மட்டுமே இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

சபாநாயகருக்கும், எம்.பிக்களுக்கும் இதற்காக நன்றி கூறுகிறேன். ஜனநாயக ரீதியாக நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை நான் ஏற்றுக்கொள்கிறேன். பெரும்பான்மையை சரியான முறையில் நிரூபிக்கப்பட வேண்டும்'' என்று ஜனாதிபதி கூறினார்.

''நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்ததை வன்மையாகக் கண்டிருக்கிறேன். எந்தக் கட்சியாக இருந்தாலும், மோசமாக நடந்துகொள்வது தவறு'' என்று ஜனாதிபத மேலும் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து இதன்போது கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி,''இதற்கு ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பேற்க வேண்டும். நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், போலீஸ் ஆகிய துறைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் இருந்தது. ஜனாதிபதியாக இருந்தாலும் பிறரின் பணிகளில் தலையீடு செய்வதில்லை என்ற இணக்கத்தில் பணியாற்றினோம்.'' என்று கூறினார்.

இதேகுற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதி முன்வைப்பதாக செய்தியாளர்கள் இதன்போது கூறிய போது, பதிலளித்த ஜனாதிபதி, ''அப்போது அதனைக் கூறியிருக்க வேண்டும். இதனைக் கூற அவர்களுக்கு முதுகெலும்பிருக்கவில்லையா? என்று கேள்வியெழுப்பினார். இவற்றுக்கு ரணில் விக்ரமசிங்கவும், சாகல ரத்நாயக்கவும் பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :