பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடிய ஆதரவாளர்கள் கைதாகி விடுவிப்பு

  • 26 நவம்பர் 2018
வேலுப்பிள்ளை பிரபாகன் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வேலுப்பிள்ளை பிரபாகன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64வது பிறந்த நாள் இன்றாகும்.

1954ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்தநாளை தமிழ் மக்கள் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களும் யாழ் பல்கலைக்கழக வாளகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதே வேளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபாகரனின் சிந்தனை எனக் குறிப்பிட்டு அவரின் பல சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கைது

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாட முயற்சித்தமைக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த பொருட்கள் பறிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இன்றைய தினம் காலை வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாட இருந்த நிலையில் அங்குவந்த போலீசார் அங்கு துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்ததுடன் வல்வெட்டித்துறை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றபோது சிவாஜிலிங்கமும் வல்வெட்டித்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து கேக் உள்ளிட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினரை விடுவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :