மாவீரர் தினத்துக்கு இலங்கை அரசு மறுப்பு- "போராளிகளை நினைவு கூர்வது மக்களின் உரிமை"

மாவீரர் நாள்
Image caption கோப்புப்படம்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது என வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

"இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் உரிமைக்கு எதிராகத் தெற்கில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் துர்பாக்கிய நிலைமை காணப்படுகிறது." என்றும் அவர் தெரிவித்தார்.

"போரில் உயிர்நீத்த தமது பிள்ளைகளை தாய் தந்தையர் நினைவுகூர்ந்து அழுவதையோ, தமது உடன்பிறப்புக்களை சகோதரர்கள் நினைவுகூர்ந்து தேற்றிக் கொள்வதையோகூட சகித்துக்கொள்ள முடியாத தெற்கின் இழி மனோநிலையை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும்" என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

மாவீரர் தினத்தை இலங்கை அரசு தடுக்க நினைப்பதை பற்றி இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

"தமிழ் மக்களின் இதயத்தில் இருக்கும் தலைவர் பிரபாகரனை அடக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ எந்த ஆட்சியாளர்களாலும் முடியாது என்பதை அடக்குமுறையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் நெருங்கிய உறவினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"மாவீரர்களை நினைவேந்தாமல் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதாக இருந்தால் நிச்சயமாக எங்களுக்கு விடுதலையைப் பற்றிச் சிந்திப்பதற்கோ அல்லது அதனை அனுபவிப்பதற்கோ எந்த விதமான அருகதையில்லை என்பதையும் எங்கள் மக்கள் உணர வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

மாவீரர் தினத்தை கொண்டாடக்கூடாது என இலங்கை அரசு அறிவித்திருப்பது உலக நாகரிகத்திற்கு முரணானதும் அடிப்படை மனித உரிமையை மீறும் செயல் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

"இன விடுதலைக்காகப் போராடி உயரிய தியாகமான உயிர்த்தியாகத்தை செய்த போராளிகளையும் மக்களையும் நினைவுகூர்வதும் உலக வழக்கம் மட்டுமல்ல அந்தந்த மக்களின் உரிமையும்" என தெரிவித்தார் சுரேஷ் பிரேமசந்திரன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகப் பிரகடனம் செய்து அதனை மார்தட்டி விழா எடுக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் சமூகம் விடுதலைப் புலிகள் மீதான தடையை இன்னமும் நீக்காமல் இருப்பது புலிகளின் பெயரை வைத்து தென்னிலங்கையில் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கான குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதேயன்றி வேறில்லை என ஆவர் மேலும் தெரிவித்தார்.

மாவீரர் தினம்

தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களது உயிரை தியாகம் செய்த மாவீரகளை நினைவு கூறும் நாள் இன்று செவ்வாய்க்கிழமை தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்படுகிறது.

Image caption கோப்புப்படம்

இதனை முன்னிட்டு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாலை 6.05 மணிக்கு அக வணக்கதுடன் மாவீரர்தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர் நீத்த முதல் மாவீரர் லெப். சங்கர் (சத்தியநாதன்) இறந்த நவம்பர் 27ம் தேதியைதான் தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினார்கள்.

புலிகள் இயக்கத்திலிருந்து உயிர்நீத்தவர்களின் உடல்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் அகப்பட்டுவிடக்கூடாது, உயிர் நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் புதைப்பது, அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என விடுதலைப்புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த நடைமுறையை தமிழீழ விடுதலைப்புலிகள் பேணி வந்தனர்.

படத்தின் காப்புரிமை STR

முதலாவது மாவீரர் நிகழ்வு

இந்த நிகழ்வு, 1989ஆம் ஆண்டு தொடங்கி, மாவீரர் தினம் எனும் பெயருடன் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்று பகுதியில் புலிகளின் முதலாவது மாவீரர்தினம் அனுசரிக்கப்பட்டது.

அன்று தொடங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினமே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உரை இடம்பெறும்.

வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால் மாவீரர்தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Image caption கோப்புப்படம்

ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் அந்த வருடத்தின் மாவீரர்களின் எண்ணிக்கையை புலிகள் வெளியிடுவார்கள்.

உரிமைகோர முடியாத தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அவர்கள் இந்த எண்ணிக்கையோடு இணைப்பதில்லை. அது புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது.

2008ம் ஆண்டு மாவீரர் தினமே புலிகளால் அனுசரிக்கப்பட்ட இறுதி மாவீரர்தினமாகும்.

அந்த வருடத்தின் அக்டோபர் 30ம் தேதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலை புலிகள் அறிவித்தனர்.

2009 மே 19ம் தேதி வரையான போரின் இறுதிநாள் வரை சுமார் 40,000 போராளிகள் வீரச்சாவு அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

2009 போர் முடிந்த பின்னர் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்வதை தடுக்க இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.

Image caption கோப்புப்படம்

மாவீரர்களின் கல்லறைகளும் நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த இடங்களை அழித்துவிட்டு அதில் இராணுவ முகாம்களை அமைத்தனர்.

எனினும் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாளினை அனுசரித்துவருகின்றனர்.

இந்த ஆண்டு மாவீரர் தினம்

இலங்கையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இம்முறை மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இல்லாத துயிலும் இல்லங்களில் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவீரர் நாள் நிகழ்வுகளைக் தடுப்பதற்கு இலங்கை போலீஸார் சில இடங்களில் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

கோப்பாய், சாட்டி மற்றும் மாவடி முன்மாரி ஆகிய இடங்களில் மாவீரர் தினத்தை நடத்துவதற்கு எதிராக நீதிமன்றக் கட்டளைகளை போலீஸார் கோரியிருந்தனர்.

எனினும் விடுதலைப் புலிகளின் கொடி, சின்னங்கள், பாடல்களைப் பயன்படுத்தாமல் மாவீரர்களை நினைவு கூரத் தடையில்லை என்று யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: