இலங்கை அரசியல் நெருக்கடி: "என்னை கொல்ல வருபவர்களை நான் தடுக்க மாட்டேன்" - சிறிசேன

சிறிசேன படத்தின் காப்புரிமை Getty Images

ரணில் விக்ரமசிங்கவுக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தாலும், பிரதமராக ஏற்கப் போவதில்லை என்ற அரசியல் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனநாயக ரீதியாக நாடாளுமன்ற சம்பிரதாயத்தை ஏற்று ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலப்பிரச்சினைகளுடன் பார்க்கும்போது, எதிர்காலத்தில் இணைந்து பயணிப்பதற்கு எவ்வித உறுதியும் இல்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

"கடாபியைப் போல் இழுத்துச் சென்று என்னைக் கொல்ல வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சிக் காரர்களும், என்.ஜி.ஓ. காரர்களும் எச்சரித்தனர். என்னைக் கொல்ல முயற்சிப்பவர்களுக்கு எனது வீட்டுக் கதவு என்றும் திறந்தே இருக்கிறது'' என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை இன்று சந்தித்தபோது ஜனாதிபதி இதனைக் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரணில் விக்ரமசிங்க

''கடந்த நான்கு ஆண்டுகளில் பிக்குகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. முப்படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர். இவற்றை செய்ய வேண்டாம் எனக் கூறினேன். இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சர்வதேசம் கூறுகிறது. ஆனால் எமது இராணுவத்தினரைக் கொன்ற பிரபாகரனின் தரப்பினருக்கு தண்டனை இல்லை. விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். சர்வதேசம் எனக் கூறும் தரப்பினர் எம்மீது மட்டுமே குற்றங்களைச் சுமத்துகின்றனர். மனித உரிமைகள் மீறப்பட்டன, சர்வதேச போர் சட்டதிட்டங்கள் மீறப்பட்டன என்று இராணுவத்தினருக்கு எதிராக மட்டுமே விசாரணை நடத்தக் கோருகின்றனர்.

"வெளிநாடுகளில் பதுங்கியுள்ள விடுதலைப் புலிகளின் முக்கியமானவர்களை இலங்கைக்கு அழைத்துவந்து, தண்டனை வழங்கும் பொறிமுறையொன்று இல்லை. இதுகுறித்து யாரும் பேசுவதில்லை. இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்களாயின், பதுங்கியுள்ள விடுதலைப் புலி முக்கியஸ்தர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையெனில் சர்வதேசத்துடன் பேச்சு நடத்தி, குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அப்படியெனில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரும் விடுவிக்கப்பட வேண்டும். இதுவே நியாயமானது."

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இலங்கையின் தொடக்கப்பள்ளியில் “பேருந்து வகுப்பறை” ஏற்படுத்திய மாற்றம்

"என்னைக் கொல்ல நடந்ததாக கூறப்படும் சூழ்ச்சி குறித்த விசாரணைகளில் அலட்சியம் காட்டப்படுகிறது. என்னைக் கொல்ல வருகிறார்கள் என்று தெரிந்துகொண்டால் நான் நுழைவாயிலைத் திறந்துவைப்பேன். பாதுகாப்புத் தரப்பினரையும் விலகிக் கொள்வேன்."

மேலும், "இவ்வாறான நிலையில், எதிர்காலத்தில் இரு தரப்பினரும் இணைந்து, எவ்வாறு அரசாங்கத்தைக் கொண்டு செல்வது என்பது குறித்து விரிவாக கலந்துரையாட வேண்டியிருக்கிறது. எப்படி அரசாங்கத்தைக் கொண்டுசெல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இணைந்து பயணிப்பதில் எந்த உறுதியும் இல்லாமல் இருக்கிறது. முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. முரண்பாடுகள் அதிகரித்தால் நாடு வீழ்ச்சியை நோக்கிச் செல்லும்." என்று தெரிவித்தார்.

"225 பேர் ஆதரவளித்தாலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் எனக் கூறியிருந்தேன். அது எனது அரசியல் நிலைப்பாடு. ஆனால் இன்று ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளது குறித்து என்னை விமர்சிக்க முடியும்."

" 117 பேர் கையெழுத்திட்டு, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கேட்டுக்கொண்டதால் அவரைப் பிரதமராக நியமித்தேன். ஜனநாயக சமூகத்தின் சிறந்த அறிகுறியாக நான் இதனைக் காண்கின்றேன். ஆனால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்கும் எனது தனிப்பட்ட அரசியல்நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இன்றும் இல்லை. ''

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: