இலங்கை ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்கும் முயற்சிகளின் தொடர் தோல்வி

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

1994ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை வழங்கியே தேர்தலில் வெற்றிபெற்றனர்.

ஆனால் இதுவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை.

இந்த நிலையில் தான், இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ரத்து செய்ய வேண்டும் என தனிநபர் பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் டிசம்பர் 18 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தப் பிரேரணையை முன்வைத்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையின் அபாயத்தை கடந்த 50 நாட்களில் நாட்டு மக்கள் உணர்ந்துள்ளதாக இந்தப் பிரேரணை முன்வைத்த நளிந்த எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரமுறையை ரத்து செய்வது குறித்த பிரேரணைக்கு ஆதரவளித்து தங்களைத் தாங்களே கௌரவப்படுத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நளிந்த கோரிக்கை முன்வைத்தார்.

''ஜே.பி.வி. கட்சி இந்தப் பிரேரணைக் கொண்டு வந்தது என்பதற்காக இதனை எதிர்க்க வேண்டாம். அனைவரும் இணைந்து இதனை செய்ய வேண்டும். அனைவரும் இதற்கான கௌரவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

''நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகக் கூறியே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். அவ்வாறு கூறியவர் தற்போது 19ஆவது திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் குறைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறுகிறார்.'' என்று தெரிவித்தார்.

நளிந்த முன்வைத்த பிரேரனை வழிமொழிந்த ஜனதா விமுக்தி பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், நிறைவேற்று அதிகாரம் ''மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரிடம் சென்றால் என்ன நடக்கும் என்பதை மக்கள் உணர்ந்திருப்பார்கள்'' என்று தெரிவித்தார்.

எனவே, நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் விஜித்த ஹேரத் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கருத்து தெரிவித்த மலிக் சமரவிக்ரம இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக உரையாற்றினார்.

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு,

எம். ஏ. சுமந்திரன்

ஜனதா விமுக்தி பெரமுனவின் இந்தப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆதரவு தெரிவித்தார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டபோது,'' நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை ரத்து செய்வதற்கு ''மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் மகிந்த ராஜபக்ஷ போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளிக்கக்கூடும்'' என்று குறிப்பிட்டார்.

தனிப்பட்ட ரீதியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை முன்னிலைப்படுத்தாது, நாட்டு மக்களின் நன்மை கருதி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரமுறை ரத்து செய்யும் வரலாறு :

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமராக அன்று இருந்த ஜே.ஆர்.ஜயவர்தன 1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை அறிமுகம் செய்தார்.

'பெண்ணை ஆணாகவும், ஆணைப் பெண்ணாகவும் மட்டுமே தன்னால் மாற்ற முடியாது எனவும், ஏனைய அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் எனவும் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன கூறிய வாசகம் இன்றும் பேசப்படுகிறது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகாரமுறைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்திருந்த கலாநிதி என்.எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா உள்ளிட்ட இடதுசாரி தலைவர்களும், நிறைவேற்று அதிகாரத்தினால் ஏற்படும் பாதகங்களை சுட்டிக்காட்டியிருந்தனர்.

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் ஜே.ஆர். ஜயவர்தன நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நிறைவேற்றினார்.

இதன்பின்னர் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என 1994ஆம் ஆண்டு முதல் இதுவரை பதவிக்கு வந்த அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் வாக்குறுதியளித்தனர். தேர்தல் பிரசாரங்களில் முக்கிய வாக்குறுதியாக இது இருந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சந்திரிக்கா குமாரதுங்க

1994ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சந்திரிக்கா குமாரதுங்க இந்த வாக்குறுதியை முதன்முறையாக அறிவித்தார். நிறைவேற்று அதிகாரம் ரத்து செய்யப்படும் என எழுத்துமூலம் சந்திரிக்கா குமாரதுங்க பிரகடனம் செய்தார். இதனால், ஜே.வி.பி. கட்சி சார்பாக களமிறங்கிய வேட்பாளர் கலப்பத்தி ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிக் கொண்டார்.

1994ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரிக்கா, 2000ஆம் ஆண்டு வரை இரண்டு முறை ஜனாதிபதி பதவி வகித்தார். எனினும், நிறைவேற்று அதிகாரமுறை ரத்து செய்யப்படவில்லை.

2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரமுறையை ரத்து செய்வதாகக் கூறி தேர்தலில் போட்டியிட்டார். இரண்டு முறை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவி வகித்தபோதிலும், நிறைவேற்று அதிகார முறையை ரத்து செய்யப்படவில்லை.

நிறைவேற்று அதிகார முறையை ரத்து செய்வதற்குப் பதிலாக 18ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த மகிந்த, இரண்டு முறைமட்டுமே ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற வரையறையை நீக்கி, ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற சரத்தைக் கொண்டுவந்தார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கத் தீர்மானித்தன. இதற்காக பிரபல பௌத்த பிக்கு மாதுலுவாவே சோபித்த தேரரின் தலைமையில் ''சாதாரண பொதுமக்களுக்கான தேசிய அமைப்பு'' உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் பிரதான கொள்கையாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு பிரகடனப்படுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

இந்த அமைப்பின் ஆதரவைப் பெற்ற மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதுமட்டுமன்றி, நிறைவேற்று அதிகாரமுடைய கடைசி ஜனாதிபதி தான் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஒருமுறை போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை ரத்து செய்யப்படும் என இதன்பின்னர் பல இடங்களில் தற்போதைய ஜனாதிபதி கூறியிருந்தார்.

மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டு, 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும், முழுமையாக ரத்து செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தான், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மகிந்த ராஜபக்ஷவை திடீரென பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமே மூல காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: