இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தரப்புக்கு கட்சி தாவியவர்களுக்கு அமைச்சர் பதவி தர மறுக்கும் சிறிசேன

மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், ISHARA S.KODIKARA / getty images

இலங்கையில் புதிய அமைச்சரவையை நிறுவும் பொருட்டு, நேற்று, வியாழக்கிழமை 29 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பக்கமாக கட்சி மாறிய எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை.

தான் தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, ரணில் விக்ரமசிங்கவின் அணிக்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கப் போவதில்லை என்று, கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவும் அதனை அங்கீகரித்திருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி , விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமககே, இந்திக பண்டார, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் மனுஷ நாணயகார ஆகியோர் ரணில் விக்ரமசிங்க அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சுப் பதவி வழங்குவதற்கு தனது பெயரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்தாகவும், ஆனால் ஜனாதிபதி அதனை நிராகரித்து விட்டார் என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து வருகின்றவருமான ஏ.எச்.எம். பௌசி, உள்ளுர் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துதுள்ளார்.

பட மூலாதாரம், facebook

படக்குறிப்பு,

ராஜித சேனாரத்ன

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள ஆவணமொன்றின் அடிப்படையில், ஏ.எச்.எம். பௌசிக்கு தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் பதவியினை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்திருந்ததாக அறிய முடிகிறது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஆளுந்தரப்புக்கு சென்றவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி கூறியதாக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தனவும் நேற்றைய தினம் அமைச்சரவை நியமனத்தின் பின்னர் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், facebook

படக்குறிப்பு,

ஏ.எச்.எம். பௌசி

இதேபோன்று இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கும் அமைச்சுப் பதவி வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரை செய்திருந்த போதிலும், அதையும் ஜனாதிபதி மைத்திரி நிராகரித்து விட்டதாகவும கூறப்படுகிறது.

அண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சரத் பொன்சேகா மிகவும் மோசமாகவும் கடுஞ் சொற்களாலும் விமர்சித்து வந்தார்.

மேலும் ஜனாதிபதி மைத்திரி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு வகுக்கப்பட்டதாகக் கூறப்படும் சூழ்ச்சித் திட்டத்துடன், சரத் பொன்சேகாவும் தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் இருந்த தேசிய அரசாங்கத்தில், சரத் பொன்சேகா அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

பட மூலாதாரம், facebook

படக்குறிப்பு,

சரத் பொன்சேகா

இதேவேளை, போலீஸ் திணைக்களத்தினை உள்ளடக்கிய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை யாருக்கும் பொறுப்பளிக்காமல் ஜனாதிபதி மைத்திரி தன்வசம் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சூழ்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டதாக சில மாதங்களுக்கு முன்னர் தகவல் ஒன்று வெளியிடப்பட்ட போது, அது தொடர்பில் அப்போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை வைத்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியியின் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று, ஜனாதிபதி குற்றம்சாட்டியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: