இலங்கையில் கனமழையால் உண்டான வெள்ளம் - மிதக்கும் வடக்கு மாகாணம்

இலங்கை

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குமாறு இலங்கையின் இராணுவத்தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர உத்தரவினை விடுத்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளம் காரணமாக 13,646 குடும்பங்களை சேர்ந்த 44,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2661 குடும்பங்களை சேர்ந்த 8539 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து 52 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வான்பாய்வதனால் அதனை அண்டியுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளதுடன் ஆயிரக் கணக்கான ஏக்கர் நெற்செய்கையும் அழிவடைந்துள்ளது. சில இடங்களில் வெள்ளம் காரணமாக போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப் பெரிய நீர்பாசன குளமான இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளமையினால் அதிக நீர் வெளியேறுகின்ற காரணத்தால் தாழ் நில பிரதேசங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய குளங்களான வவுனிக்குளம் , உடையார் கட்டுக்குளம்,முத்தையன்கட்டு குளங்கள் வாண் பாய்வதனால் அதனை அண்டிய தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 9475 குடும்பங்களைச் சேர்ந்த 31,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் 26 நலன்புரி நிலையங்களில்1394 குடும்பங்களை சேர்ந்த 4649 பேர் தங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3794 குடும்பங்களைச் சேர்ந்த 12,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் 25 நலன்புரி நிலையங்களில்1240 குடும்பங்களை சேர்ந்த 3805 பேர் தங்கியுள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 708 பேர் பாதிக்கபட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மீட்பு அதிகாரிகள்

இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ பணியில் ஈடுபடிருந்த அரச ஊழியர்கள் சிலர் வெள்ளத்தில் சிக்குண்ட சம்பவம் ஒன்று சனிக்கிழமை மாலை இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு தொடர்பான அனர்த்த முகாமைத்துவ பணிகளில் ஈடுபட்டிருந்த அரச ஊழியர்களே வெள்ளத்தில் சிக்குண்டுள்ளனர்.

கடுமையான மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய குளமான இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் சனிக்கிழமை காலை திறந்து விடப்பட்டது. இதனால் தாழ் நிலத்தை நோக்கிய நீர் வரத்து சடுதியாக அதிகரித்தது.

நீர் வரத்து சடுதியாக கூடியதால் கண்டவளை பிரதேச செயலகம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அங்கு கடமையிலிருந்த அரச ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறமுடியாத நிலை ஏற்பட்டது.

பின்னர் வெள்ளத்தில் சிக்கிய அரச ஊழியர்களை கடற்படையினர், ராணுவத்தினர் மற்றும் பொலிசாரின் உதவியுடன் படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: