இலங்கை வெள்ளம்: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கை

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 38,209 குடும்பங்களை சேர்ந்த 118,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2827 குடும்பங்களை சேர்ந்த 8936 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து 27 முகாம்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ள அனர்த்தத்தினால் 2 பேர் மரணமடைந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர்.170 வீடுகள் முழுமையாகவும் 3506 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. 2 சிறு கைத்தொழில் நிறுவனங்கள் சேதமடைந்துள்ளது.

பெருமளவிலான விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளதுடன் கால்நடைகளும் அதிகளவில் இறந்துள்ளது.

வெள்ளத்தினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளதுடன் வவுனியா,யாழ்ப்பாணம்,மன்னார் மாவட்டகளில் சில இடங்கள் மாத்திரம் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று,ஒட்டிசுட்டான்,புதுக்குடியிருப்பு,துணுக்காய்,மாந்தை கிழக்கு,வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 9574 குடும்பங்களை சேர்ந்த 30,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி,கண்டவளை,பூநகரி,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 24184 குடும்பங்களை சேர்ந்த 74,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மருந்தங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 4257 குடும்பங்களை சேர்ந்த 12642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில்155 குடும்பங்களை சேர்ந்த 526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம்,நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 39 குடும்பங்களை சேர்ந்த 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பினை நிவர்த்தி செய்வதற்கு சுமார் 3 ஆயிரம் மில்லியன் ரூபா தேவைப்படும் என கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களினால் கணிப்பிடப்பட்டுள்ளது.

இரு மாவட்டத்தின் முதன்மை தேவையாக கூரைத் தகடுகள்,நில விரிப்புக்கள், மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் , சமையல் பாத்திரங்கள், கூரை விரிப்புக்கள் காணப்படுகின்றது.

குறித்த மாவட்டங்களில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நிவாரண பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட்டதுடன் உதவி பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார்.

இதேவளை எதிர்க் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டகளுக்கு விஜயம் செய்து வெள்ளப்பாதிப்புக்குள்ளான மக்களை பார்வையிட்டார்.

கிளிநொச்சி இரணைமடு குளம் பெரும் ஆபத்தை உண்டாக்கபோகிறது என்பதை அறிந்திருந்த அதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகள் மக்களுக்கு போதிய விழிப்புணா்வை வழங்க தவறியமையே பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இரணைமடுக் குளத்தின் வான்கதவுகளை உரிய நேரத்தில் திறக்காமையால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக அழிவுகள் ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.அதில் எந்த விதமான உண்மையும் இல்லை என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இரவு நேரத்தில் இரணைமடு குளத்தின் வான் கதவுகளினை திறந்திருந்தால் பாரிய உயிர் சேதம் ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினால் இரவு வேளை வாண் கதவுகளினை திறக்கமால் 21.12.18 அன்று காலை வாண் கதவுகள் திறக்கப்பட்டது என்றார்.

வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வீடு திரும்பும்போது இழப்பீடுகளை வழங்க துரித திட்டமொன்றை முன்னெடுக்குமாறு வட மாகாண ஆளுநர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன் பிரகாரம் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளவர்களுக்கு வீடுகளை திருத்தித்கொள்வதற்கு முதற்கட்டமாக 10,000 ரூபாவும் மதிப்பீட்டுப் பணிகளின் பின்னர் 2,50,000 வரையில் நிதியுதவி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வௌ்ள நிலைமை காரணமாக வட மாகாணத்தில் பெருமளவிலான விளைநிலம் நீரில் மூழ்கியுள்ளதால் ஏக்கருக்கு 40,000 ரூபா வரையில் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: