மாலியில் இலங்கை இராணுவம் மீது தாக்குதல் - இருவர் பலி

கோப்புப்படம் படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI
Image caption கோப்புப்படம்

ஆப்பிரிக்க நாடான மாலியில் போராளிகளால் நடத்தப்பட்ட அதிசக்திவாய்ந்த தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையில் கடமையாற்றிய இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் மாலி நேரப்படி இன்று அதிகாலை 6.30 அளவில் இடம்பெற்றதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிடிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

தாக்குதலில் மேலும் மூன்று இலங்கை சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

WMZ ரக யுத்த வாகனமொன்றில் பயணித்த இலங்கை இராணுவத்தினர் மீது தொலைவிலிருந்து தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

படத்தின் காப்புரிமை Anadolu Agency
Image caption கோப்புப்படம்

இலங்கை கேப்டன் ஒருவரும், சிப்பாய் ஒருவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக இலங்கையின் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சம்பவத்தில் காயமடைந்த ஏனைய மூன்று சிப்பாய்களும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இலங்கை இராணுவத்தினர் பயணித்த யுத்த வாகனத்திற்கு அருகில் பயணித்த மற்றுமொரு வாகனமும் சேதமடைந்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.

மாலியில் போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மேலதிக விசாரணைகளை அந்த நாட்டிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படைத் தலைமையகம் மேற்கொண்டு வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :