இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த அரசாங்கத்தில் கிடைக்காது: இலங்கை அமைச்சர் றிசாட் பதியுதீன்

றிசாட் பதியுதீன்

இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினை தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தனக்கு கிடையாது என்று, இலங்கையின் அமைச்சர் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள போதிலும், அது பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசாங்கத்தின் எஞ்சிய ஆயுட்காலத்துக்குள் அது சாத்தியமாகுமென்று தான் நினைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றத்தில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து தென்னிலங்கையில் மிகவும் மோசமான பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன என்றும், புதிய அரசியலமைப்பு - நாட்டை பிரிவினைக்கு இட்டுச் செல்லுமென தென்னிலங்கையில் இனவாத பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

"புதிய அரசியலமைப்பு நகல் தொடர்பில் தமிழர் பிரதேசத்தில் ஒருவகையான பிரசாரமும், முஸ்லிம் பிரதேசத்தில் இன்னுமொரு வகையான பிரசாரமும் தென்னிலங்கையில் இனவாதத்தை தூண்டும் பிரசாரமும் என, ஒவ்வொரு சாராரும் தத்தமது அரசியல் இருப்புக்காகவும் ஆதாயத்துக்காகவும் மேற்கொண்டு வருகின்றனர்".

"புதிய அரசியலமைப்பு நகலில் தமிழிலே ஒன்றிருப்பதாகவும் சிங்களத்திலே வேறொன்று இருப்பதாகவும் ஊடகங்கள் சிலவும் வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன".

"ஜனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்டு சில கட்சிகள் புதிய அரசியலமைப்பு நகல் பற்றி, இல்லாத பொல்லாத விடயங்களை சோடித்து கதைகளை கட்டவிழ்த்துள்ளன. எப்படியாவது இந்த தீர்வுத்திட்ட முயற்சியை இல்லாமலாக்க வேண்டுமென மேற்கொள்ளப்பட்டுவரும் சூழ்நிலையில், நாடாளுமன்றில் வெறுமனே நூறு ஆசனங்களை கொண்ட பிரதமர் தலைமையிலான அரசாங்கம், எவ்வாறு இதனை நிறைவேற்றப்போகின்றது" என்றும் அமைச்சர் றிசாட் கேள்வியெழுப்பினார்.

"இதேவேளை நாடாளுமன்றில் 85 ஆசனங்களைக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர், புதிய அரசியலமைப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தற்போதைய நிலையில், நாடாளுமன்றத்தின் மிகுதியாக இருக்கும் ஆயுட்காலத்துக்குள் எவ்வாறு இதனை அரசாங்கம் நிறைவேற்றப்போகின்றது"?

"நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளுக்கிடையில் எதிரும் புதிருமான நிலைப்பாடுகளும் ஏட்டிக்குப்போட்டியான செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், புதிய அரசியமைப்பினை நிறைவேற்றுவது சாத்தியம் தென்படவில்லை" எனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் கூறினார்.

"அதுமாத்திரமன்றி நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதாவது 150 வாக்குகளால் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்களின் அங்கீகாரம் அதற்குப் பெறப்படவேண்டும். இந்த இக்கட்டான நிலையில் தீர்வுத்திட்டம் பற்றிய ஒரு நம்பிக்கையை இந்த அரசாங்க காலத்தில் நாம் எதிர் பார்க்க முடியுமா" என்றும் அவர் கேட்டார்.

எவ்வாறாயினும் நாட்டிலே இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டு நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டுமெனில், மூவின மக்களினது பிரதிநிதிகளும் மனம்விட்டு பேசி எல்லோருக்கும் பொருத்தமான ஒரு தீர்வு திட்டம் உருவாக்கப்பட்டு, அதனை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், இதுவே காலத்தின் தேவையாக இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் றிசாட் தலைமை வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :