மலையக தொழிலாளர்களின் சம்பள நிர்ணயம்: சர்ச்சைக்கு மத்தியில் உடன்படிக்கை

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு உடன்படிக்கை இன்று கையெழுத்திடப்பட்டது.

அலரிமாளிகையில் வைத்து முற்பகல் இந்த கூட்டு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

கூட்டு உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியன மாத்திரமே ஆவணத்தில் கையெழுத்திட்டன.

பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த முறை கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என அதன் தலைவர் இராமநாதன் தெரிவித்தார்.

கூட்டு உடன்படிக்கையில் காணப்படும் பழைய சரத்துக்கள் சிலவற்றை ரத்து செய்து, புதிய சரத்துக்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என தன்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, ஏனைய இரண்டு தொழிற்சங்கங்களும் ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே, உடன்படிக்கையில் தான் கையெழுத்திடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், 700 ரூபாய் என்ற அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கும் கூட்டு உடன்படிக்கை இன்று கையெழுத்திடப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவரின் முழு சம்பளமாக 855 ரூபாய் இன்றைய கூட்டு உடன்படிக்கையின் பிரகாரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை சம்பளமாக 700 ரூபாயும், விலைக்கான கொடுப்பனவாக 50 ரூபாயும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவற்றை உள்ளடக்கி 105 ரூபாயும், நாளாந்த சம்பளமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிகமாக ஒரு கிலோகிராம் கொளுந்துக்கு 40 ரூபாவை வழங்கவும் உடன்படிக்கையின் பிரகாரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை சம்பளத் தொகையை வழங்குவதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், எஞ்சிய 50 மில்லியன் ரூபாயை பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, 150 மில்லியன் ரூபாயை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலுவை சம்பளத் தொகையை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட அவர்களின் அடிப்படை வசதிகளை தீர்மானிக்கும் வகையில் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட கூட்டு உடன்படிக்கை கடந்த வருடம் அக்டோபர் மாதம் 18ம் திகதி காலாவதியாகியது.

புதிய உடன்படிக்கையின் பிரகாரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு கோரிக்கை தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, இன்றைய தினம் 855 ரூபாவிற்கு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இதேவேளை, கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முதலாளிமார் சம்மேளன கட்டிடத் தொகுதிக்கு முன்பாக இன்று காலை முதல் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

1000 இயக்கத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியன அலரிமாளிகைக்கு சென்று, இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.

இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை, பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரவிந்திர சமரவீரவும் பிரசன்னமாகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும், கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட கூட்டு உடன்படிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறுப்பட்ட போராட்டங்கள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்