'மகிந்த ராஜபக்ஷ தரப்பினர் பயந்து பின்வாங்கினர்' - இரா.சம்பந்தன் பதிலடி

இரா.சம்பந்தன் படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே பேச்சுவார்த்தை மேசைக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கினர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சியின்போது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பிரதான காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் அனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும் நாங்கள் உண்மை முகத்துடன் பங்காற்றினோம். எங்களின் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே பேச்சுவார்த்தைக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கினர். பேச்சுக்களை நாங்கள் குழப்பியடிக்கவில்லை.போலி முகத்தைக் காட்டி மகிந்த தரப்பினரே குழப்பியடித்தனர்."

படத்தின் காப்புரிமை Getty Images

"இது நாட்டு மக்களுக்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கும் தெரிந்த விடயம். ஆனால், இப்போது மகிந்த புதுக்கதை சொல்கின்றார்."

"உண்மையை அவர் பேச வேண்டும். தம் மீதான பிழைகளை அவர் மறைக்க முற்படக்கூடாது. மகிந்த அரசுடன் அனைத்துச் சுற்றுப்பேச்சுகளிலும் நாங்கள் பங்காற்றினோம். எங்களின் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே பேச்சு மேசைக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கினார்கள்," என்றார்.

"எனினும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மகிந்த ராஜபக்ஷ எந்த வேளையிலும் எங்களுடன் பேச முடியும். தமிழ் மக்களின் எதிர்காலத் தீர்வுக்காக எத்தகைய தரப்பினருடனும் பேச நாம் தயாராக இருக்கின்றோம். அந்தப் பேச்சுகள் நேர்மையானதாக இருக்க வேண்டும். காலத்தை வீணடிக்கும் வகையில் இருக்கக்கூடாது," என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

18 சுற்றுபேச்சுவார்தை

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனை மற்றும் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் மகிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் இடையில் 18 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இப்பேச்சுவார்த்தையில் அரச தரப்பு சார்ப்பில் சஜின்வாஸ் குணவர்த்தன, ஜி.எல்.பீரிஸ், நிமால் சிறிபாலடி சில்வா ஆகியோர் கலந்துகொண்டதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நாடாளுமன்ற தெரிவு குழு ஊடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டதுடன் அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் முக்கியமான விடயங்களை அரசாங்கத்துடன் பேசி அதில் ஒரு தீர்வு எட்டப்படும் பட்சத்தில் அதன் பிற்பாடு நாடாளுமன்ற தெரிவு குழுவில் அங்கம் வகிக்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு நாள் குறிப்பிடப்படிருந்தும் மகிந்த தரப்பினர் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :