இலங்கை கிழக்கு மாகாணம்: தன் மாளிகை பராமரிப்பு நிதியை குழந்தைகளின் கல்விக்கு வழங்கிய ஆளுநர்

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா
Image caption எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் மாளிகையினை பராமரிப்பதற்காக ஒதுக்கப்படும் நிதியை, தந்தையரை இழந்த ஏழை மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு, அந்த மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை பராமரிப்புக்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபாய் நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.

இந்த நிலையில், குறித்த நிதியை கிழக்கு மாகாணத்தில் தந்தையரை இழந்த மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சமூக சேவைகள் அமைச்சுக்களின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக, ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலின்போது ஆளுநர் மாளிகையினை பராமரிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியிலிருந்து, கிழக்கு மாகாண பாடசாலைகளில் தரம் 01 முதல் 05 வரை கற்கின்ற, தந்தையரை இழந்த மாணவர்களுக்கு , மாதம்தோறும் 500 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ய கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுடன் பிபிசி தொடர்பு கொண்டது.

"ஆளுநர் மாளிகையின் பராமரிப்புக்காக வருடத்துக்கு 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அதன் மூலம் திருத்த வேலைகள், மேலதிக அழகுபடுத்தல் ஆகிவற்றினை மேற்கொள்ள முடியும். இதேவேளை ஆளுநர் மாளிகைக்கான நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு வேறாகவும் நிதி வழங்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்த நிலையில், தற்போது ஆளுநர் மாளிகையில் எந்தவித பராமரிப்பு வேலைகளையும் மேற்கொள்ளத் தேவையில்லை என தீர்மானித்துள்ளேன். இருந்தபோதும், பராமரிப்பு செலவுக்கான நிதியில் 5 மில்லியன் ரூபாயினை கைவசம் வைத்துக் கொண்டு, மிகுதி 15 மில்லியன் ரூபாயினை, மாகாணத்தில் தந்தையரை இழந்த நிலையில் கல்வி கற்கின்ற, தரம் 01 முதல் 05 வரையிலான மாணவர்களுக்கு 500 ரூபாய் வீதம் வழங்கவுள்ளோம்.

அந்த வகையில், மேற்படி வரையறைக்குள் 2500 மாணவர்கள் இருப்பார்கள் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு இந்த தொகையினை வழங்க முடியும்" என, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா கூறினார்.

மார்ச் முதல் தேதி, இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தாம் உத்தேசித்துள்ள மாணவர்களின் தொகையிலும் அதிகமான மாணவர்கள் இருப்பார்களாயின், திறைசேரியுடன் பேசி, மேலதிக நிதிப் பெற்று மாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்ற காரணங்களால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய தந்தையரை இழந்து வருமானமற்ற நிலையில் உள்ளனர்.

அண்மையில் வாகரை பிரதேசத்தில் வயது குறைந்த மாணவர்கள், நிலக்கடலை போன்ற பொருட்களை விற்பனை செய்து, தங்களின் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதாக சமூக வலைதளத்தில் செய்திகளும் வெளியாகி இருந்தன.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே, கிழக்கு மாகாண ஆளுநர், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக, அவரின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்