இலங்கை அரசியல்வாதிகளின் போதைப்பொருள் பயன்பாடு - அமைச்சரிடம் விசாரணை

போதைப்பொருள் படத்தின் காப்புரிமை Lahiru Harshana
Image caption ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளாரா என நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பின், அதன் முடிவுகளை அவராகவே வெளியிட்டார்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கொக்கேன் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்ட குழுவினால், ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன.

இதன்போது, ரஞ்ஜன் ராமநாயக்க, கொக்கேன் போதைப்பொருளை பயன்படுத்துவதாக கூறப்படும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை குறித்த குழுவின் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதாக விசாரணை குழுவின் தலைவர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் தொடர்பான தகவல்களை தற்போதை நிலைமையில் வெளியிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு, தேடப்பட்டு வந்த மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் துபாயில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, அரசியல்வாதிகளும் கொக்கேன் உள்ளிட்ட பெறுமதியான சட்டவிரோத போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த பின்னணியிலேயே, கொக்கேன் போதைப்பொருளை பயன்படுத்துவதாக கூறப்படும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் தன்னிடம் உள்ளதாக அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, ரஞ்ஜன் ராமநாயக்கவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பிலான வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு திகதியொன்றை பெற்றுத்தருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ரஞ்ஜன் ராமநாயக்க கூறியுள்ளார்.

கொக்கேன் போதைப்பொருள் பயன்படுத்துவதாக கூறப்படும் தகவல்களையும் தான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பதிவு தபாலின் மூலம் அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தான் இதுவரை எந்தவித போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை என ரஞ்ஜன் ராமநாயக்க கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்குச் சென்ற அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, தனது ரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகளில் போதைப்பொருள் கலந்துள்ளதா என்பது தொடர்பிலான பரிசோதனைகளை மேற்கொண்டு, அது குறித்த அறிக்கையையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த அறிக்கையை அவர் உடனடியாக வெளியிட்டதுடன், அதனை உரிய தரப்பினருக்கு சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தன்னை போன்று ஏனைய தரப்பினரும், இவ்வாறான பரிசோதனைகளை நடத்தி, அறிக்கைகளை சமர்பிக்குமாறு ராமநாயக்க பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்