இலங்கை வரலாற்றிலேயே அதிகளவு போதைப்பொருள் சிக்கியது

இலங்கை படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பின்போதே, இந்த ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றின், வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வேன்களிலிருந்து இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு பெரிய பயண பொதிகளுக்குள், 272 பொதிகளாக பொதியிடப்பட்ட நிலையில், இந்த ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

294 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய, 2945 மில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படை இணைந்தே இந்த சுற்றி வளைப்பை முன்னெடுத்திருந்தனர்.

சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் கொழும்பு - கோட்டை நீதவான் முன்னிலையில், முன்னிலைப்படுத்தப்பட்டு, தடுத்து வைத்து விசாரணை நடாத்துவதற்கான உத்தரவை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த ஹெரோயின் போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட விதம் மற்றும் அதன் பின்னணி குறித்தும் தற்போது விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

கொழும்பில் பெருமளவு ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றிய, பொலிஸாருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தின் ஊடாக அவர் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை BBC Sport

இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கையானது, எதிர்கால சந்ததியினருக்கு ஆற்றிய உன்னத பணி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி 95.88 கிலோகிராம் எடையுடைய 1100 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும், இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன்படி, சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புப்பட்டு, நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் அண்மையில் நீதி அமைச்சினால் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரிகளுக்கான விண்ணப்பங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியுள்ளதுடன், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான கயிறு தொடர்பான ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான மரண தண்டனையை எதிர்வரும் ஓரிரு மாதங்களில் நிறைவேற்றுவதாக கடந்த பிப்ரவரி ஆறாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில், இந்த விடயமும் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பேராசிரியர் பிரதீபா மஹனாமாஹேவா கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்