இலங்கை: கொள்ளையிடப்பட்ட 500 கோடி ரூபாய் மாணிக்கக்கல் மீட்பு

மாணிக்கக்கல் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புக்காக

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து காணாமல் போனதாக கூறப்படும் பெறுமதியான மாணிக்கக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பன்னிபிட்டிய - அரவ்வாவல பகுதியிலுள்ள மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்த, சுமார் 500 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல், கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவு இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக கண்டி - கொடமுன - பிட்டிகல பகுதியிலுள்ள சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கெலுமா என அழைக்கப்படும் கெலும் இந்திக்க சம்பத் என்ற சந்தேக நபரிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, கிடைக்கப் பெற்ற தகவல்களின் பிரகாரம், பாணந்துரை - கெசேல்வத்த பகுதியிலுள்ள வீடொன்று நேற்று மாலை சுற்றி வளைக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Nopadol Uengbunchoo
Image caption சித்தரிப்புக்காக

இவ்வாறு நடாத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது, குறித்த வீட்டிலிருந்து காணாமல் போனதாக கூறப்படும் 500 கோடி ரூபா பெறுமதியான நீல நிற மாணிக்கக்கல் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேலும், சந்தேகநபருக்கு சொந்தமான பிட்டிகல பகுதியிலுள்ள வீட்டிலிருந்து 150 லட்சம் ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவு தொடர்ந்தும் விசாரணைகள் நடாத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, சட்டவிரோத போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதுஷின் வழிநடத்தலின் பிரகாரமே இந்த கொள்ளை சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :