சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் முற்றிலும் பெண்களே இயக்கிய விமானம்

இலங்கை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அனைத்து மகளிர் ஊழியர்களையும் கொண்ட விமானமொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல் -320 ஏயார் பஸ் விமானம், முழுமையான மகளிர் ஊழியர்களுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூரை நோக்கி இன்று பயணத்தை மேற்கொண்டது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிருக்கு பெருமை சேர்க்கும் வகையிலேயே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

விமானத்தின் பிரதான விமானி மற்றும் உதவி விமானி ஆகியோரும் மகளிர் என்பதுடன், விமானத்தில் பணியாற்றிய அனைவரும் மகளிர் என்பதும் விசேட அம்சமாகும்.

இதன்படி, குறித்த விமானத்தில் முழுமையான எட்டு மகளிர் பணியாளர்கள் கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பித்திருந்ததுடன், உரிய நேரத்தில் சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிடுகின்றது.

மகளிருக்கான ரயில் பெட்டி

இதேவேளை, மகளிருக்கான ரயில் பெட்டியொன்று இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அலுவலக நேரங்களில் ரயில் சேவைகளை பயன்படுத்துவோரில் சுமார் 50 சதவீதமானோர் மகளிர் என்பதுடன், இதனை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதன்படி, இலங்கையில் இன்று முதல் அலுவலக நேரங்களில் பயணிக்கும் ஆறு ரயில்களில், மகளிருக்கான ரயில் பெட்டியொன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, மாத்தறையிலிருந்து கொழும்பிற்கும், காலியிலிருந்து கொழும்பிற்கும், கொழும்பு - கோட்டையிலிருந்து காலிக்கும், மஹவயிலிருந்து கொழும்பு - கோட்டை வரையும் இந்த ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புத்தளத்திலிருந்து கொழும்பு கோட்டை வரையும், கொழும்பு - கோட்டையிலிருந்து புத்தளம் வரையுமான இந்த ரயில் சேவை முதற்கட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது.

மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை வரலாற்றில் மகளிருக்கான போக்குவரத்து பரிணாமத்தை ஏற்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :