இலங்கையில் காணிகளை விடுவிக்க ஆணைக்குழு அமைக்கப்படாது - மைத்ரிபால சிறிசேன

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜெனிவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்கும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள விடயங்களை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறை - மீகஹதென்ன பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட காணிகள் (நிலங்கள்), அதன் உரிமையாளர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனவும், அவற்றை விடுவிக்க ஆணைக்குழுவொன்று நிறுவப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு வெளியிடப்பட்ட கருத்தானது, அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட பிழையான தகவல்கள் அடிப்படையிலானது என்று கூறிய ஜனாதிபதி, அவ்வாறானதொரு ஆணைக்குழு அமைக்கப்படாது எனவும் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சரியான விடயங்களை ஏற்றுக் கொள்வதை போன்றே, அந்த அறிக்கையிலுள்ள பிழையான விடயங்களை ஏற்றுக்கொள்ள போவதில்லை என ஜனாதிபதி கூறினார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை தொடர்பில் கொண்டு வந்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதனை கவனத்தில் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெனிவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரினால் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி, மனித உரிமைகள் ஆணைக்குழுவோடு கையெழுத்திடப்பட்ட விடயங்களைத் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தனக்கோ, வெளிவிவகார அமைச்சுக்கோ அறிவிக்கப்படாமல், இந்த விடயங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை தரப்பினரின் பிழையான தீர்மானங்களின் காரணமாக இடம்பெற்ற இந்த விடயத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த செயற்பாடானது, இலங்கை முப்படையினர், அரசாங்கம் மற்றும் நாட்டு மக்களை காட்டிக் கொடுக்கும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகள், சர்வதேச தொடர்புகள் மற்றும் சர்வதேச செயற்பாடுகள் தொடர்பான பொறுப்பு ஜனாதிபதிக்கே உரியதே அன்றி, அதற்கு கீழான பதவிகளை வகிப்பவர்களுக்கு உரித்தானதல்ல எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு எதிராக முன்னதாக ஏகாதிபத்திய சூழ்ச்சிகள் இடம்பெற்றதாக கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது வேறு வடிவத்தில் அந்த சூழ்ச்சிகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் நாட்டை காட்டிக் கொடுக்க வெளிநாட்டு சக்திகளுக்கு தான் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :